பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் 40

-

கையில் தீப்பந்தம் வைத்திருப்பதாக அவர்கள் கற்பனை செய்திருந்தனர்.

அத்தெய்வமகளை, வைகறைத் தெய்வமாக “அரோரா” என்று அவர்கள் பெயரிட்டழைத்தனர். அவள் காலைத் தெய்வமாக இருந்ததுடன் மாலைத் தெய்வமாகவும் விளங்கினாள். எனவே, அவள் மேற்கே நெடுந்தொலையில், நீலக்கடலில் மரகதமணிபோல் விளங்கிய ஒரு தீவில் வாழ்வதாகக் கருதப்பட்டது.

அத்தீவு மலர்ச்சோலைகளும் பைம்பொழில்களும் புல் வெளிகளும் நிறைந்து விளங்கிற்று. பகல் பொழுதின் வெம்மையில் வாடாமல் அவள் அப்பசுமைத் தீவில் இருப்பாள். கதிரவன் மறைந்ததும், அவள் நெற்றி விண்மீன் சுடர் தெறிக்க, தீப்பந்தம் ஒளிவீச, மீண்டும் வந்து மறுநாள் வைகறை வரையில் முத்து வாசலில் காத்திருப்பாள். சில சமயங்களில் வானவீதியில் செல்லாமல், ஒளிமயமான ஒரு பாதை வழியே பூமியில் இறங்கி வருவாள், அப்பொழுது உலகமக்கள் அவளை அன்போடு விரும்பி வரவேற்பார்கள்.

அவ்வாறு அவள் உலகின் வழியே செல்லும்போது, செடிகளின் மலர்களிலும் இலைகளிலும் அவள் பனிநீரைத் தெளித்து அவை வாடாமல் புதுப்பிப்பாள்; மக்களுக்கு நல்வாழ்த்துக் கூறுவாள்; கண்ணுறங்கும் பறவைகளைத் துயில் நீக்குவாள்.

அவளை உலக மாந்தர் எல்லாரும் அன்புடன் போற்றிய போதிலும், அவள் உள்ளத்தில் அன்பு சுரக்கும்படி செய்த ஆண்மகன் யாரும் முன்பு இருந்ததில்லை. ஆனால், டிராய் மன்னனின் மகன் டிதோனஸ் என்னும் அழகுமிக்க இளைஞனைக் கண்டதும் அரோரா அவன்மீது காதல் கொண்டு விட்டாள்.

டிதோனஸ் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்தான். அவன் உறுப்புகள் ஒவ்வொன்றும் எழிலுற அமைந்திருந்தன. அவன் எப்போதும் இசை பயில்வதிலும் நடனமாடுவதிலும், விளையாட்டு வேடிக்கைகளை மேற்கொள்வதிலும் ஈடுபட்டு மகிழ்வுற்று வந்தான்.டிராய் மன்னனின் அரண்மனையில் உள்ள எல்லாரும் அவனைக் கண்ணெனப் போற்றி வளர்த்தனர்.