பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

அப்பாத்துரையம் - 40

உண்டுபண்ணிவிடுவான்; பூமியை அதிரச் செய்வான்; திடுமெனக் கடல்மீது புதிய தீவுகள் தோன்றும்படிச் செய்வான். அவன் அச்சூலத்தை நிலத்தில் ஊன்றினால் அதிலிருந்து தெள்ளிய இனிய நீர் ஆறாகப் பெருகும்.

நெப்டியூன் தன் விருப்பம்போல் கடலில் சூறைக் காற்றைக் கிளப்பிக் கடலைக் குமுறவைக்கவும், இல்லையேல், அமைதியை ஏற்படுத்தவும் வல்லவன். நுரைத்துப் பொங்கிச் சீறியடிக்கும் வெள்ளிய அலைகள் எழும்புவதையும், படகுகள் அவைமீது இங்குமங்கும் அடிபடுவதையும் பார்க்கும்போது நெப்டியூனுக்குச் சினம் மூண்டுவிட்டது என்று கிரேக்கர்கள் கூறுவார்கள்.மீண்டும் கடலில் அலை அடங்கி அமைதியான நீலக்கடலாக அது தோற்றமளிக்கும்போது அவனது சீற்றம் தணிந்துவிட்டதாக அவர்கள் கூறுவார்கள்.

மாலை வெயிலில் பலநிறக் கதிர்கள் கடலில்பட்டு, கண்கவரும் ஓவியம்போல் திகழும்போது, நெப்டியூன் பொன் மயிருள்ள கடல் குதிரைகள் பூட்டிய முத்துத் தேரில் பவனி வருவதாகவும், அவனை மச்ச மைந்தரும் மீன் மகளிரும் புடைசூழ்ந்து அவனது புகழைப் பாடிவருவதாகவும், அவர் களுக்கு நடுவே நெப்டியூனின் மகன் டிரைட்டன் வெற்றிச்சங்கம் ஊதிவருவதாகவும் அவர்கள் கற்பனை செய்திருந்தார்கள்.

டிரைட்டன் ஒருபாதி மனிதனும், ஒருபாதி மீனுமாக அமைந்தவன். இடுப்புவரையில் மனித உடலையும் அதற்குக் கீழே மீன் உடலையும் அவன் பெற்றிருந்தான். வலம்புரிச்சங்கு ஒன்றை அவன் வைத்து முழங்குவான். அது பேரிடி முழக்கம்போல் வானம் அதிரக் கேட்கும். நெடுந்தொலையில் பேரலைகள் கற்பாறைகள் மீது மோதும்போது அம்முழக்கந்தான் கேட்கும்.

டிரைட்டனின் தாய் ஆம்பிட்ரைட் முன்பு மச்ச கன்னியாக ருந்தவள். அதனால் அவள் இடுப்புக்குக் கீழே மீன் வால்போல் அமைந்துவிட்டது போலும்!

ஆம்பிட்ரைட் மிக்க அழகுள்ளவளாக இருந்தமையால், நெப்டியூன் அவளை மணந்துகொண்டான். ஆனால், பிற பல தெய்வங்களைப்போலவே, அவன் அன்பும் ஒரே இடத்தில் நிலைத்திருக்கவில்லை. பிறகு அவன் சில்லா என்னும் அழகிய பெண்ணைக் காதலித்தான்.