பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

109

இவ்வளவு அன்புடன் உறவாடிப் பொழுதுபோக்கும் தாயையும் மகளையும் யாரும் கண்ணால் கண்டதில்லை; அவர்கள் தெய்வப் பிறவிகளாகையால், பிறர் கண்ணுக்குப் புலப்படாமல் திரியும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தது. ஆனால், தன் மகள் பெர்செபோனீயின் விளையாட்டுகளைக் கண்டு மகிழ்ந்து டெமீட்டர் சிரிக்கும்போதெல்லாம் மரங்களில் கனிகள் பழுக்கும்; கதிர்கள் பருத்துக் குலை சாய்க்கும். அதைக் கண்ணுற்ற கிரேக்கக் குடியானவர்கள், "இவ்வாண்டு, பயிர் நன்றாக விளையும்," என்று கூறிக்கொள்வார்கள். அவ்விரு தெய்வ மகளிரும் தங்கள் வயல்களினூடு நடந்து செல்வதாலும், அவர்களுள் ஒருத்தி செழிப்பின் செல்வியான டெமீட்டர் என்பதாலுந்தான் இவ்வாறு பயிர் செழித்திருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.

ஒருநாள் காலையில் டெமீட்டர் மலர் கொய்வதற்காகப் பூம்பொழிலுக்குச் சென்றாள். அவளுடன் அவள் தோழியரான கடல் மகளிரும் சென்றனர். அவர்கள் மஞ்சள்நிற மலர்களை எடுத்து அழகிய கண்ணியாகத் தொடுத்து அவள் முடிமீது சூட்டினார்கள். அது அவளுக்குப் பொன் மகுடம் வைத்தது போல இருந்தது. அதேபோல் அவள் கழுத்தில் அவர்கள் அணிவித்த மஞ்சள்நிற மாலை பொன் ஆரம் பூட்டியதுபோல் விளங்கிற்று.

பெர்செபொனீ இப்படி மலர் எடுத்து வருகையில், இதற்குமுன் அவள் ஒருபோதுமே கண்டிராத அழகுடன் விளங்கிய வெள்ளை சூரியகாந்தி மலர்ச்செடி ஒன்றை அவள் கண்டாள். பிற செடிகளைப்போல் அதில் தனித்தனியே ஓரோர் மலர் இருப்பதற்கு மாறாக, ஒரே காம்பில் நூறு மலர்கள் செறிந்து பூத்திருந்ததை அவள் கண்டாள்.

“அம்மம்மா! என்ன அழகு! எத்தனை பூ!” என்று அவள் வியப்புடன் கூறி, அச்செடியை நெருங்கிப் போய் பார்த்தாள்.

அம்மலர்களின் நறுமணம் அந்த இடமெல்லாம் கமழ்ந்தது. அந்த விந்தை மலரைப் பார்க்க வருமாறு பெர்செபோனீ தன் தோழியரை அழைத்தாள்.