பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

171

அவள் அசையாதது கண்டு, அவன் அதேனாவின் கோயி லென்றும் பாராமல் படைவீரரை அனுப்பி, அவளை வலுக் கட்டாயமாகத் தூக்கிவர உத்தரவிட்டான். படைவீரர்களைக் கண்டு, தனே துடி துடித்தாள்.

பெர்ஸியஸ் இந்தச் சமயத்தில் திடுமென வந்து சேர்ந்தான். தாயைக் கைப்பற்றித் துணிந்து படைவீரர் நின்ற காட்சிகண்டு அவன் குருதி கொதித்தது. ஆனால், படைவீரரைப் பின்பற்றி வந்த பாலிடெக்டிஸ், பெர்ஸியஸைக் கண்டு வியப்பும் சீற்றமும் கொண்டான். அவனைப் பிடித்துக் கொல்லும்படி அவன் தன் படைவீரர்க்கு ஆணையிட்டான். பெர்ஸியஸால் இன்னும் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவன் பையிலிருந்து மெடூசாவின் தலையை எடுத்து அனைவர் முன்பும் நீட்டினான். எல்லாரும் கல்லாய்விட்டனர். பாலிடெக்டிஸும் அவர்களில் ஒருவனானான்.

தாயை மீட்டுக்கொண்டு பெர்ஸியஸ் மனைவியுடன் ஆர்கஸுக்குப் புறப்பட்டுச் சென்றான். போகுமுன் டிக்டிஸை அவர் ஸெரிஃவஸின் அரசனாகமுடிசூட்டினான்.

ஆர்கஸ் செல்லும் வழியில் ஒரு புயல் வந்து, பெர்ஸியஸின் கப்பலைத் தெஸ்ஸலி நாட்டுக்கரையில் ஒதுக்கிற்று. தெஸ்ஸலி அரசன் அவர்களை வரவேற்றான்.

தெஸ்ஸஸி நாட்டின் தலைநகரான லாரிஸாவில் அப்போது ஒரு வீரக் கேளிக்கைப் போட்டி நடந்தது. அரசன் பெர்ஸியஸை அதில் கலந்துகொள்ளும்படி வேண்டினான். ஆர்கஸின் கிழ அரசன் அக்ரிசீனும் அதில் ஈடுபட்டிருந்தான். பெர்ஸியஸ் போட்டியில் எறிந்த சக்கரப்படை, தவறி அவன்மீது விழ, அவன் உயிர்நீத்தான். இங்ஙனம் பெர்ஸியஸ் தான் அறியாமலே அவன் தன் பாட்டனைக் கொன்றுவிட நேர்ந்தது.

ஆர்கஸின் மக்கள் பெர்ஸியஸையே அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், ஊழமைதியை முற்றிலும் நிறை வேற்றிவிடப் பெர்ஸியஸ் மறுத்தான்; மெகபாந்திஸ் என்ற டிரின்ஸ் நகர் அரசனையே அவன் ஆர்கஸ் அரசனாக்கினான். பெர்ஸியஸ் தன் மனைவி ஆண்ட்ரோமீடாவுடனும், தன் தாய் தனேயுடனும் டிரின்ஸ் நகரில் புகழுடன் ஆண்டுவந்தான்.