பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

189

அச்சமொன்றும் இல்லாமல் வழக்கம்போல் இருந்தால் பெரியண்ணன் அதைக் கண்டு எவ்வளவுக்குச் சிரித்து மகிழ்ந்திருப்பானோ அவ்வளவுக்கு அவன் அப்போது சிரிக்கவில்லை. உள்ளே அச்சம் வாட்டியது. பசி எடுப்பது வரையில் அப்படிப் பாசாங்கு செய்துவிட்டுப் பிறகு அவனைத் தின்றுவிடும் என்ற கலக்கம் ஒரு பக்கம் அவனுக்கு இருக்கத்தான் செய்தது. அந்த ஓணான் முன்னைவிட ஆறுதலான குரலில் மீண்டும் பேசத் தொடங்கியது. "அட, அப்பாவி மகனே! எனக்கு உன் துன்பம் எல்லாம் நன்றாகத் தெரியும்; என் குகையை விட்டு நான் வெளியே வந்ததே உனக்கு உதவி செய்யத்தான்; உனது கடைக்குட்டிப் பெண் குழந்தையை இன்றிரவு என்னிடம் கொண்டுவந்து தா: அவளை நான் என் சொந்தப் பெண் போல் வளர்த்து வருவேன்,” என்றது. அதைக்கேட்டதும் பெரியண்ணன் திடுக்கிட்டு மயக்கம் போட்டு விழுந்துவிட்டான். கீழே நெருஞ்சி முள்ளும் கள்ளியுமாகக் கிடந்தபடியால், அவன் மேலெல்லாம் முள் தைத்து வலி எடுத்தது. ஆனால், அந்த ஓணான் மெதுவாக அவனைத் தூக்கி இருத்தி, தன் கேள்விக்கு இரண்டிலொன்று பதில் சொல்லும்படி கேட்டது.

உடனே

அந்த ஏழைத் தகப்பனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வறுமையால் துன்பப்படுவதென்றால் மிகவும் தொல்லைதான்; ஆனால், அதற்காகத் தன் பச்சைக் குழந்தையை விந்தையான முதலை ஓணானிடம் ஒப்புவிப்பது என்றால் மனம் வருமா? யார் கண்டார்கள். அது ஒரே வாயில் குழந்தையை விழுங்கி விட்டாலும் வியப்புறுவதற்கில்லையே! ‘எந்தப் பொல்லாத வேளையில் இந்த மலை அடிவாரத்தில் குழிதோண்ட வந்தேனோ,' என்று அவன் மனதுக்குள் அவனை நொந்து கொண்டான். அவனை வேலைக்கு ஏவிய தலைவனையும், பொதுவாக, அவன் பிறந்த வேளையையும் பழித்துக் கொண்டான். அவன் அப்படிக் காக்க வைப்பது ஓணானுக்குப் பிடிக்கவில்லை. "அட, பயித்தியக்காரா, உன் களிமண் மூளையை இப்படி எல்லாம் குழப்பிக் கொள்ளாதே. நீ உன் குழந்தையை என்னிடம் ஒப்புவிக்கப் போகிறாயா இல்லையா என்பதைப் பற்றி வீண் எண்ணங்கள் கொள்ளவேண்டாம்; அவளை எடுத்து வளர்ப்பதென்று நான் முடிவு செய்துவிட்டேன்; சூரியனை மேற்கே தோன்றச் சொன்னாலும் சொல்லலாம்;