பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

195

முணுமுணுத்தாள். மகட்கொடையாகப் பெருந்தொகை கொண்டு வந்திருப்பதையும் பாராமல் தன்னை வேலைக் காரிபோல் நடத்துவது நீதியா, முறையா என்றும் அவள் குறை கூறினாள். என்னவானாலும் அவள் ஒரு வேலைக்காரி போல் நூல் நூற்கப் போவதில்லை என்று கூறி, அவளிடம் ஒப்புவிக்கப் பட்டிருந்த பஞ்சுக் கட்டுகளை வெளியே வீசி எறிந்துவிட்டாள். வார முடிவும் நெருங்கிவிட்டது. அரசன் கட்டளையை மீறியதற்காகத் தனக்குத் தண்டனை கிடைக்குமோ என்ற அச்சமும் உண்டாகிவிட்டது. சற்று வெளியே போய் வருவதாகச் சொல்லிவிட்டு ஓடோடியும் போய் ஓணான் சீமாட்டியிடம் நடந்தவைகளைச் சொல்லி, ஏற்கெனவே நூல் நூற்று வைத்திருக்கும் கட்டுகளைத் தனக்குத் தந்துதவ வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். அரச தண்டனையி லிருந்து அவளைக் காப்பாற்ற விரும்பிய ஓணானும், அவள் கேட்டது போலவே நூல் கட்டுகளைக் கொடுத்து உதவினாள். நூலைப் பெற்றுக் கொண்ட பச்சைக்கிளி நன்றிகூடத் தெரிவிக்காமல் முன்போலவே விரைந்து சென்று விட்டபடியால், ஓணான் தேவதை மீண்டும் வருத்தத்துடன் மனம் வெம்பியது. எனவே, முன்பு இட்டிருந்த சாபத்தை மாற்றவில்லை.

கொடுத்த வேலை சரிவரச் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவந்த அரசன் நூல் கட்டுகள் அடுக்கி வைக்கப் பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுற்றான். பச்சைக் கிளிக்கும் தோழிக்கும் பரிசாக ஆளுக்கொருநாய்க்குட்டியைக் கொடுத்தான். ஒரு வார முடிவில் திரும்பவும் வந்து நாய்க்குட்டிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன என்று கவனிக்கப் போவதாகக் கூறிச் சென்றான். தோழி நாய்க்குட்டியை அன்புடன் பேணி, அதைக் குளிப்பாட்டி உணவூட்டி நன்றாக வளர்த்தாள். ஆனால், பச்சைக்கிளிக்கோ சினம் தீரவில்லையாகையால் அவள் நாய்க்குட்டியை வெளியே வீசி எறிந்து விட்டாள்.

வாரமுடிவு நெருங்கியதும் பச்சைக்கிளிக்கு அச்சம் உண்டாகிவிட்டது. தன்னிடம் கொடுத்த நாய்க்கு ஏற்பட்ட கதியை அறிந்தால், அரசன் சினத்தினால் என்ன செய்வானோ என்று அஞ்சினாள். மறுபடியும் அவள் தன் ஓணான் தாயிடம் உதவி கேட்க எண்ணி ஓடிச் சென்றாள்.