பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

197

போதாக்குறைக்குக் கடைசியாக இந்த வீட்டின் பழைய வேலைக்காரனைத் தாறுமாறாக ஏசிப் பேசுகிறாய்?" என்று கிழ வேலைக்காரன் அவள் மனதில் படும்படி சினந்து கூறினான்.

கண்ணாடியில் அவள் முகத்தின் நிலைமையையும் கண்டு, அவன் கூறிய கடுஞ்சொற்களையும் கேட்ட பச்சைக்கிளிக்குத் தான் எவ்வளவு கெட்டவளாக நடந்து விட்டோம் என்பது புலப்பட்டுவிட்டது. 'தன்னை வெளியே துரத்திவிடாமல் அரண்மனையில் இருந்துவர இசைந்தானே அரசன்; அவன் இரக்கத்தை என்ன சொல்வது!' என எண்ணினாள்.

அவள் மனங்குன்றிய நிலையில் கண்ணீர் வழிந்தோட அழுதுகொண்டே தன்னைத் தயவுசெய்து உள்ளே விடும்படி அந்த முதிய காவலாளியைப் பணிவாக வேண்டிக் கொண்டாள். ஓணான் தேவதையின் காலடியில் விழுந்து தன் அறியாமைக்கும் செருக்குக்கும் மன்னிப்புக் கோரப் போவதாகச் சொன்னாள். உண்மையில் அவளிடம் அன்பும் பரிவுமே கொண்டிருந்த அக்காவலாளி அவளை உடனே உள்ளே அனுப்பி வைத்தான். நடந்தவைகளை எல்லாம் கதவின் பின்புறத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த ஓணான் தேவதையும் பச்சைக்கிளிக்குத் தண்டனை போதும் என்று கருதி அவளை எதிரேற்க வந்தாள். தன்னை அன்புடன் வளர்த்துப் பெருமைக்கு ஆளாக்கிய ஓணான் தேவதையைக் கண்டதும் பச்சைக்கிளி அவள் காலடியில் கதறி விழுந்து தன்னை மன்னிக்கும்படி கோரினாள். “சிறு பிள்ளை, அறியாமல் செய்துவிட்டேன்; மெய்யாகவே அதற்கு வருந்துகிறேன்; என்னை மன்னிக்க வேண்டும்," என்று கதறி அழுதாள்.

உடனே ஓணான் தேவதை தன் கையிலிருந்த மந்திரக் கோலைப் பச்சைக்கிளியின் தலையில் வைத்தாள். உடன் தானே பச்சைக்கிளி பழைய அழகிய வடிவத்தை அடைந்து விட்டாள். நன்றி மறந்து நடப்பதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் பன்மடங்கு பேரெழில் பெற்று அவள் விளங்கினாள். அங்கு வந்த அரசனும் பெரிதும் மகிழ்வடைந்தான்.