பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. தேன்மொழியாள்

நினைவுக்கெட்டாத நெடுங்காலத்துக்கு முன்னே, ஈழத் தீவில் அழகிற் சிறந்த மூன்று சகோதரிகள் இருந்தனர். வேல்விழியாள், மயில்நடையாள், தேன்மொழியாள் என்று பொருத்தமான பெயருடன் விளங்கிய அம்மூன்று மங்கையரில் கடைசித் தங்கையான தேன்மொழியாள்தான் ஒப்பற்ற அழகு பெற்றிருந்தாள். அதனால் தமக்கையர் இருவரும் அவள்மீது பொறாமை கொண்டிருந்தனர்.

அம்மூன்று சகோதரிகளும் அவர்கள் வீட்டு மச்சுத் தாழ்வாரத்தில் படர்ந்திருந்த பூங்கொடிகளின் நிழலில் உட்கார்ந்து தெருவேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். ஒருத்தி நூல் நூற்றுக் கொண்டிருப்பாள்; அடுத்தவள் திரி திரிப்பாள்; மூன்றாமவள் பின்னுவாள். அப்படியே வேலைக் கிடையே பொழுது போக்காய் பேசிக்கொண்டும், 'தங்களுக்கு வாய்க்கப் போகும் மாப்பிள்ளை எப்படி இருப்பான்' என்பதை மனதில் கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டும் அவர்கள் காலங் கழித்து வந்தார்கள்.

ஒருநாள் அவ்வூர் ளவரசன் வேட்டைக்குப் போகும்போது அவ்வழியே சென்றான். தாழ்வாரத்தில் தங்கப் பதுமைகள்போல் இருந்த அம்மூன்று பெண்களையும் கண்டதும், அவன் அளவில்லாத வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தான். அவனுடன் வந்த தோழர்களைப் பார்த்து அவன் பின்வருமாறு கூறினான்: "அதோ பாருங்கள்; நம் ஈழ நாட்டு அழகுச் சுடர்கள். எவ்வளவு எழிலுடன் விளங்குகிறார்கள்! நூல் நூற்கும் மங்கை என்ன அழகாக இருக்கிறாள்! திரி திரிப்பவள் அவளையும் மிஞ்சி விடுவாள்போல் இருக்கிறதே! ஆனால், பின்னல் பின்னுகிறாளே அந்தப் பேரழகிதான் என் மனதைக் கவரும் எழிலணங்கு."