பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(212)

அப்பாத்துரையம் 40

-

"ஐயையோ! உன் பொன்னான விரல்குப்பி தொலைந்து போய்விட்டதா? இனி நீ என்ன செய்வாய்? உனக்கு அது உயிர் ஆச்சே. பலகணிமேல் மறந்து போய் வைத்து விட்டிருப்பாய்; காக்கை குருவி ஏதாவது எடுத்துச் சென்றிருக்கும்; இரு, இரு, நான் என் மாயக் கண்ணாடியில் மை போட்டுப் பார்த்து அது எங்கிருக்கிறது என்று பார்த்துச் சொல்லுகிறேன்,” என்றாள்.

காணாமற் போய்விட்ட தன் விரல்குப்பி இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளத் தேன்மொழியாள் துடியாய்த் துடித்தாள்.

வஞ்ச நெஞ்சம் படைத்த வேல்விழியாள் உள்ளே சென்று திரும்பி வந்து, "ஐயோ, தேன்மொழியே! உன் விரல்குப்பி ‘பாதாள வயிரன்' தோட்டத்தில் அல்லவா விழுந்துவிட்டது. ஆயினும் என்ன? நீ நம் வீட்டுச் சுவரைத் தாண்டித் தோட்டத்தில் இறங்கி அதை எடுத்துவர எண்ணினால், நானும் மயில்நடையும் உன்னை ஒரு கயிற்றில் கட்டி இறக்கி விடுகிறோம். அதை எடுத்துக் கொண்டதும் நீ கயிற்றை அசைத்தால், நாங்கள் உன்னை மேலே தூக்கிவிடுவோம். உச்சிவேளையில் பூதம் உறங்கும்போது நீ இறங்கலாம்,” என்று கூறினாள்.

தன் உயிர்போன்ற விரல்குப்பியைத் தேடி எடுப்பதற்காகத் தேன்மொழியாள் எது வேண்டுமாயினும் செய்யத் துணிந் திருந்தாள். வேல்விழியும் மயில்நடையும் தேன்மொழியின் இடுப்பைச் சுற்றி ஒரு வடத்தைக் கட்டிப் பூதத்தின் தோட்டத்தில் அவளை இறக்கி விட்டனர். அவள் கால் தரையில் பட்டதும் அவர்கள் மேலே வட்டத்தை அறுத்து விட்டனர். பெண்களை அப்படியே விழுங்கிவிடும் பூதத்தின் தோட்டத்தில் தேன்மொழி தன்னந்தனியே நின்றாள்.

தப்புவதற்கு வழியே கிடையாது. சுவர்மேல் ஏறி வரவும் அவளால் இயலாது. முழுதும் கண்ணாடியால் செய்த பெருஞ் சுவர்கள் அத்தோட்டத்தை வளைத்து நின்றன. அந்த மாயத்தோட்டத்தின் அழகில் ஈடுபட்ட தேன்மொழி, தனக்கு ஏற்பட்ட இடரை மறந்து, வியப்புடன் அங்குமிங்கும் சென்று மலர்களைக் கொய்யத் தொடங்கினாள். ஒரு வேளை பாதாள வயிரன் வந்துவிட்டால் சட்டென்று ஒரு செடியின் கீழ்ப் பதுங்கி