பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

217

நீர் சொட்டச் சொட்ட நனைந்துகொண்டு வரும் பாதாள வயிரனைப் பார்த்ததும், புலிமாறனுக்கும் தேன்மொழிக்கும் அச்சமும் நடுக்கமும் ஏற்பட்டுக் கலக்கம் உண்டாகிவிட்டது. அதற்குள் பூதத்துக்கு அடங்காப் பசி ஏற்பட்டிருக்கும் என்பதும் கடுஞ்சினம் மூண்டிருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இரண்டு பேரையுமே ஒரே கவளமாக அது விழுங்கிவிடும் என்று எண்ணினர். இருந்தபோதிலும் ஒரு பக்கம் துணிவும் இருந்தது. மூன்றாவது மந்திரப் பொருளான சீப்பை இளவரசன் பின்பக்கமாக வீசி எறிந்து முன்போல் தேவதையை வேண்டிக் கொண்டான்.

உடனே இரண்டு குதிரைகளுக்கும் இடையில் வானமுகட்டை முட்டும்படியாக சோப்புநுரைமலை ஒன்று கிளம்பி எழுந்தது. அதைக் கடந்துவரப் பூதத்தால் இயலாது என்று உறுதியாகத் தோன்றிய போதிலும் இளவரசன் தன் குதிரையை விரைவாகவே விரட்டினான். நொடிக்கு நொடி இருவரும் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றனர்.ஆள்விழுங்கிப் பூதமும்,ஆறுகால் குதிரையும் நுரைமலை அடிவாரத்தில் வந்ததும் மேலே முன்னேற முடியவில்லை. பாதாளவயிரன் தான் கற்ற வித்தையெல்லாம் காட்டினாலும், ஆவேசக் குதிரையால் அந்த மலையில் ஏற முடியவில்லை ‘சாண் ஏற முழம் சறுக்க,' என்பதுபோல் குதிரை வழுக்கி வழுக்கி விழுந்தது. பூதமும் அதனுடன் உருண்டது. குதிரைக்கு ஏற இயலாது என்பதை உணர்ந்த பூதம், கீழே இறங்கித் தன் காலால் நடந்து மலையைக் கடக்க முற்பட்டது. பூதமும் சறுக்கி விழுந்ததைத் தவிர ஓர் அடிகூட மேலே ஏற முடியவில்லை. பாதாளவயிரன் மூடப் பிடிவாதத்தால் மீண்டும் மீண்டும் ஏறி விழுந்து மண்டை உடைந்து அங்கேயே சாய்ந்து மடிந்தான்.

புலிமாறனும், தேன்மொழியும் தங்களுக்கு ஏற்பட்ட கெடுதல் நீங்கியதை அறிந்ததும், அளவில்லாத மகிழ்வுடன் ஊர் திரும்பி அரண்மனை அடைந்தனர். அவர்கள் திருமணவிழா வெகு சிறப்பாக நடந்தது. நெடுந்தொலையிலிருந்துங்கூட விருந்தாளிகள் வந்தனர். ஆனால், கெடுமதி படைத்த தமக்கையர் இருவருக்கும் அழைப்பு அனுப்பவில்லை. அதற்கு மாறாகத் தகுந்த தண்டனை அளிக்கப்பட்டது.

தேன்மொழியும்,புலிமாறனும் ஆனந்தவல்லியின் அருளுடன் வாழையடி வாழையாக நெடுங்காலம் இன்பமாக வாழ்ந்தனர்.