பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. தங்கக் கவரிமான்

மயமலைத் தொடர்களில் பிற எல்லா மலைகளிலும் உயரம் மிக்கதாய், எல்லாவற்றிலும் எழில் மிக்கதாய், வான முகட்டை நோக்கிச் செங்குத்தாக ஓங்கி நிற்கும் கொடுமுடிகளை யும், படுபாதாளப் பள்ளங்களையும் உடையதாய் நங்கை பர்வதம் விளங்குகின்றது. அதன் சரிவுகளில் பனித் திரள்களும், உருகுபனிப் பாளங்களும் எப்போதும் மூடிநிற்கும். அதன் அடிவாரத்தில்கூட முட்செடிகளும் பாசிகளும்தான் வேர்கொள்ளும். உருகுபனி ஆறுகள் ஊடறுத்துப் பாயும் பந்துகளில், கடுவிசையுள்ள அருவிகள் குதித்துக் குதித்துப் பாயும் போது நீர்த்திவலைகள் சிதறி அழகான வெள்ளி நுரைப் படலங்கள் கிளர்ந்தெழும். அவைமீது கதிரவனின் விரிசுடர்க் கதிர்கள் வீசும்போது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மாயவண்ணத் திரைகள் வானத்தில் படரும்.

நங்கை பர்வதத்தின் கொடுமுடிகளில் மிக உயர்ந்து நிற்பது நந்திக்கொம்பு என்னும் உச்சி. அந்தக் கொடு முடியின் அடியில் அகன்ற வாயுடன் ஒரு குகை இருக்கிறது. உலகத்திலுள்ள அரும் பெரும் கருவூலங்கள் எல்லாம் அங்கேதான் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. மலைப்பூதங்களான கூளிகள் அக்கருவூலங்களைக் காவல்செய்து வருகின்றன. அக்கூளிகள் பாசிநிற உடையுடுத்து அழகான மணிமுடி அணிந்து இன்பமாக ஆடிப்பாடித் திரியும். மணிமுடிகளின் உச்சியில் வைரம், மாணிக்கம், முத்து முதலிய ஒன்பது வகை மணிகளையும் பரல் அரிசியாகக்கொண்டு ‘கலீர் கலீர்,' என்று ஒலி விடுக்கும் சிறு சலங்கைகள் தொங்கும். கீழே நெடுந்தொலைவில் வாழும் மக்கள் தங்கள் பேராசையால் அந்த அரும்பெரும் கருவூலங்களைக் கவர்ந்து செல்லாமல் அக்கூளிகள் எப்போதும் விழிப்பாக இருந்து காவல்செய்யும்.