பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

219

எத்தனையோ பேர் பெருமுயற்சி செய்தும் அந்தக் கருவூலக் களஞ்சியத்தை நெருங்கியதுகூடக் கிடையாது. அவ்வளவு பாதுகாப்பாக மாயமாய் மறைத்து வைக்கப்பட்டுள்ள செல்வத்தைப் “பார்த்தோம்,” என்ற சொல்லக்கூடியவர் எவரும் இல்லை. எப்படியாவது அந்த நிதிக் குவையைக் கைப்பற்றிவிட வேண்டுமென்று உயிரைக்கூடப் பொருட்படுத்தாது முயற்சி செய்து தோல்வி அடைந்த ஒருவனின் கதைதான் இது.

உயர்வுமிக்க அப்பனிமலைக் குன்றுகள் சுற்றிவரச் சூழ்ந்து நிற்க, கெளரிசங்கர், கைலாசம், நந்தாதேவி முதலிய சிறந்த மலையுச்சியிலிருந்து தவழ்ந்து, பாரிசாதம், கற்பகம், தேவமல்லி முதலிய தெய்வீக நறுமலர்களின் மணங்களை ஏந்தித் தெளிந்த வானத்தில் மெல்லென வீசி வரும் இளங்காற்றை நுகர்ந்து வாழும் மூன்று வான மகளிர், அந்நங்கை பர்வதத்தின் முகட்டில் வாழ்ந்து வந்தனர். கூளிகளின் குடியிருப்புக் கருகில் ஒரு சிறிய பூங்காவில் அவர்கள் குடியிருந்தனர். அப்பூங்காவின் வேலிக்கம்பிகள் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் ஆனவை. கம்பியின் முள்முனைகள் வயிர ஊசிகளால் ஆனவை. வேலித் தூண்கள் பகலிலும் சுடர்விட்டு ஒளிரும் மரகதமணிகளால் ஆனவை. அப்பூங்காவில் வாழும் அவ்வானமகளிர் நந்திக்கொம்புச் சிகரத்தின் இடைப் பெண்கள். அப்பனிமலைகளில் வாழும் அருமையான கவரிமான்களைக் காவல் செய்வதுதான் அவர்களின் வேலை. அக்கவரிமான்கள் தங்களை வேட்டையாட வருபவர்களைத் தங்கள் அழகால் மனங் கவர்ந்து தடுமாறச் செய்து மலையுச்சியிலும் படுபாதாளங்களிலும் தங்களை விடாமல் தொடர்ந்தோடி வரும்படி பண்ணி அலைக்கழித்து முடிவில் அவர்கள் உயிரை வாங்கிவிடும்.

அக்கவரிமான் கூட்டத்தின் தலைமையாக விளங்கியது தங்கக் கவரிமான். அதைப் போன்ற உடல் அழகும் அருமைச் சிறப்பும் வாய்ந்த ஓர் உயிர்ப் பிறவியை யாருமே பார்த்திருக்க முடியாது. அதன் பால்போன்ற வெண்மை நிறத்துக்கு, அம்மலையுச்சியில் மனிதனின் காலடியே பட்டிராத மோன வெளியில் வானமண்டலத்திலிருந்து புதிதாகப் பெய்யும் பனியின் வெண்மையைத்தான் ஈடாகச் சொல்ல முடியும். அதன் கடுவேகத்துக்கு அம்மலைகளிலிருந்து கிளம்பிச் சென்று கீழே பாய்ந்து புடைக்கும் காற்றைத்தான் ஒப்பிட முடியும். அக்