பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. குடிக்கூலி

கோடைக்காலத்தில் குற்றாலத்தில் சென்று நாட் கழிக்க விரும்பித் தொலையிடங்களிலிருந்து பலர் வருவதால் அங்கே அப்போது குடிக்கூலிக்கு நெருக்கடி மிகுதி. எவ்வளவு குடிக்கூலி கொடுக்க முனைந்தும் இடம் அகப்படாமல் பலருக்கு இடர்பாடு ஏற்படுவதுண்டு. ஆகவே அங்கே தங்க விரும்புபவர் பல நாட்கள் முந்தியே குத்தகையாகக் கூடிக்கூலி பேசி முன் பணம் கொடுத்துவிடுவார்கள். வேறு சிலர் சில நாட் குடிக்கூலிக்கும் முழு ஆண்டுக் குடிக்கூலிக்கும் மிகுந்த வேற்றுமை இல்லை என்பது கண்டு, நிலையான குடிக்கூலி பேசிக்கொண்டு வேண்டும்போது அங்கே தங்கியும், மற்ற நேரங்களில் இன்னும் உயர்வான குடிக்கூலிக்கு அவ்விடத்தை விட்டும் வருவர். இதனால் அவர் களுக்கு வேண்டும் வாய்ப்புகளோடு மேலூதியமும் கிடைக்கும்.

கதிரொளிக்கும் சேந்தனுக்கும் கோடைவிடுமுறைக் காலம் வந்தது. குழந்தைகள் நலத்திற்காகவும், உடல் நலிந்திருந்த அவர்கள் தந்தையின் நலத்திற்காகவும் அனைவரும் குற்றாலத் திற்குச் சென்று தங்குவதாக ஏற்பாடாயிற்று. அவர்களுடன் சென்ற அண்டை குடியினரான கமுகவிளாகத்தினரும், பூஞ் சோலையாரும் ஒரே மொத்தமாக இரண்டு திங்களுக்குக் குடிக்கூலி பேசித் தங்கினர். ஆனால், கதிரொளியின் தாயாகிய கற்பகத் தம்மாளுக்கு அவ்வளவு நீண்ட காலத்துக்குத் குடிக்கூலி பேசி முடிக்கப் பிடிக்கவில்லை. இடையில் ஊர்செல்ல வேண்டியிருந்தால் குடிக்கூலியை வீணாக விட்டுவிட்டுப் போகவேண்டி வருமே என்று எண்ணிஅவள் பதினைந்து நாளைக்குக் குடிக்கூலி பேசிக் கொண்டாள். “அப்பதினைந்து நாளும் கழிந்தபின், வேண்டு மானால் இன்னும் பதினைந்து நாளோ, ஒரு திங்களோ பேசிக் கொள்ளலாமே; அதற்குள் என்ன கெட்டுப் போகிறது” என்றாள் அவள்.