பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(262

அப்பாத்துரையம் – 40

அவன் சென்று சில நாட்கள்தான் ஆயின. அதற்குள் அவன் திரும்பியது கண்டு உண்மையிலேயே அவன் மனைவி பைந்தொடி ஆறுதலடைந்தாள். பணம் ஈட்டினார்களா என்றுகூட அவள் கேட்கவில்லை. பணம் பற்றிய பேச்சால் அவனை விட்டுப் பிரிய நேர்வதைவிட, உழைத்து அவனையும் ஊட்டுவதே நன்று என்ற துணிவுக்கு அவள் வந்திருந்தாள். ஆனால், ஒரு பொன்னையே அவன் அவளிடம் தந்தான். “இதனைக்கொண்டு இன்றைய வீட்டுச்செலவு கழி. நான் சிறிது வெளியே போய் வருகிறேன்” என்று அவன் அகன்றான்.

‘தன் அம்பட்டத் தொழிலுக்கு இனி முழுக்குப் போட்டு விடலாமா?' என்று அவன் முதலில் எண்ணினான். ஆனால், வழக்கமான அவன் கூரிய நுண்ணறிவு வேலை செய்தது. அவன் அதைக் கைவிடவில்லை. அதை உண்மையிலேயே ஊக்கமாக நடத்தினான்.

முதல் நாளிரவில் பனைமரப் பூதம் முன்னிரவிலேயே பண்ணன் வீட்டைக் கண்டுபிடித்துக் கொண்டது. பூதங் களின் வழக்கப்படி நள்ளிரவுக்குள்ளேயே பின்புற வெளியில் நாற்புறமும் சுவரெழுப்பிப் பத்தாய வேலையை முடித்து விட்டது. பின் அது நாலாபுறமும் பல புலங்களுக்கும் தாவிச்சென்று கதிரறுத்து அடித்து, கலம் கலமாக நெல்லைக் கொண்டுவந்து குவித்தது. விடியற் காலத்திற்குள் பத்தாயம் நிரம்பி வழிந்தது.

ஊரார் ஓரிரவுக்குள் எழுப்பிய பத்தாயத்தைக் கண்டு வியப்படைந்தனர். ஆனால், பண்ணன் சமயத்துக்கேற்ற கதை கட்டிக் கூறினான்.

“உண்மை உழைப்பால் நான் சிறிது ஈட்டினேன்.ஆனால், என் உழைப்பிடையே நான் காட்டில் ஓர் அரசரையே காண நேர்ந்தது. அவரை ஒரு மலைப்பாம்பு விழுங்கிக்கொண்டிருந்தது. என் மழிப்புக் கத்தியால் பாம்பைக் கிழித்து அவரை விடுவித்தேன். அவர் எனக்குப் பரிசு தந்தனுப்பினார். அத்தடன் என் மனங்குளிர, நான் எதிர்பாராமலே, இந்த பத்தாயத்தையும் ஆள்விட்டுக் கட்டி நெல் குவித்திருக்கிறார். அவருக்கும் அவரைக் காப்பாற்ற உதவிய இந்தக் கத்திக்கும் நான் கோயிலெழுப்ப எண்ணியிருக்கிறேன்” என்றான்.