பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

11

அவர்கள் வீரத்தைச் செயலிற்காட்ட விரைவிலேயே ஒரு தறுவாய் ஏற்பட்டது. காமிலியார்டு21 நகரிலுள்ள லியொடக்ரான்22 என்ற அரசர் நாட்டில் ஸாக்ஸானியரும் தீய விலங்குகளும் வந்து பேரழிவு செய்தன. ஆர்தரையும் அவர் வீரரையும், அவர்கள் சூளுரைகளையும் பற்றிக் கேள்விப்பட்ட அவர், தம் நாட்டிற்கு வந்து தமக்கு உதவுமாறு ஆர்தருக்கு அழைப்பனுப்பினர்.

ஆர்தரும் அவர் வீரர்களும் சென்று பல நாள் காட்டு விலங்குகளை வேட்டையாடி அழித்தும், ஸாக்ஸானியரை நாட்டுக்கு அப்பால் துரத்தியும் நாட்டில் அமைதியை ஏற்படுத்தினார்கள். அதோடு அவர்கள் வேரோடு படும்படி காடுகளும் அழிக்கப்பட்டு நாடாக்கப்பட்டன.

காமலியர்டில் அரசன் அரண்மனைக்குள் செல்லும் போதே ஆர்தர், மாடத்தில் நின்றிருந்த லியோடகிரான் புதல்வி கினிவீயரைக்23 கண்டு, அவள் அழகில் ஈடுபட்டு அவளையே மணப்பதாக உறுதி செய்துகொண்டார். இது கினிவீயருக்குத் தெரியாது. விலங்குகளை யழித்துக் காடு திருத்தியபின் அவளைக் கண்டு, அவள் காதலைப் பெற அவர் எண்ணியிருந்தார். ஆனால், காமிலட்டில் பெருமக்கள் வெளியிலுள்ள பகைவர்களை எல்லாம் திரட்டிப் படையெடுக்கச் செய்து தாமும் கிளர்ச்சி செய்ததாகச் செய்தி வந்தது. எனவே, வேண்டா வெறுப்பாக அவர் காமிலட்டுக்குச் சென்றார். தம் நலனைக் கருதாது நாட்டு நலனையே எண்ணி அவர் போருக்கு முனைந்தார்.

ஆர்தரை எதிர்த்தவர்களுள், பெரும்பான்மையோர் பிரிட்டனின் அரசர்களும், சிற்றரசர்களும் ஆக இருந்தனர். பெருமக்களிலும் கிட்டத்தட்ட அனைவரும் எதிரிகளுடன் சேர்ந்து போரிட்டனர். ஆர்தர் வீரர்கள் தொகையில் குறைவு. அவர்கள் தம் புதிய வீரப்பட்டத்திற்குப் புகழ்தேட அரும்பாடுபட்டுப் போர் செய்தும் அடிக்கடி பின்வாங்க நேர்ந்தது. ஆனால், ஆர்தர் சென்றவிடமெல்லாம் அவரின் வாள் எக்ஸ்காலிபர் எதிரிகளின் குருதி குடித்துக் கொம்மாளமடித்துக் கொக்கரித்தது. மாலையில் ஆர்தரும் வீரரும் தம் கடைசித் தாக்குதலை நடத்தி எதிரிகள் அனைவரையும் வெருண்டோடச் செய்தார்கள். பெருமக்கள் அன்றடைந்த திகில், ஆர்தர் ஆட்சி முடியும்வரை அவர்களை விட்டு நீங்கவில்லை.