பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அப்பாத்துரையம் – 40

அதன்பின் போமென்ஸ், லான்ஸிலட்டிடம் மண்டியிட்டு நின்று, “என் வீரத்தை ஓரளவு உமக்குக் காட்டினேன். என்னை வீரனாக்குக" என்றான். லான்ஸிலட் அகமகிழ்வுடன் தம் வாளால் அவன் தலையைத் தொட்டு "நீ ஆர்தர் வீரருள் ஒருவனானாய், எழுந்து பணியாற்றுக,” என்றார்.

அவர் விடைகொள்ளுமுன் போமென்ஸ் அவரிடம் நம்பகமாகத் தான் இன்னான் என்பதைத் தெரிவித்தான். அவன் வேறு யாருமல்லன், கவேயின் பெருந்தகையின் தம்பியும், ஆர்தரின் மருமகனுமாகிய காரத்37 தே என்று கேட்டு லான்ஸிலட் பெருமகிழ்ச்சி கொண்டார்.

போமென்ஸ் என்று இதுகாறும் அழைக்கப்பட்ட காரெத் பெருந்தகை தன் குதிரையை விரைவாகச் செலுத்தி லினெட்டைப் பின்பற்றினான்.

தற்பெருமையும் வீம்பும் மிக்க லினெட், காரெத்தை அருகில் கூட வரவொட்டாமல் அவமதிப்புடன் நடத்திக் கடுமொழிகள் பேசினாள். "சீ! என் அருகில் வராதே என்னதான் உடைமாற்றி னாலும் நீ அண்டிவரும்போது கறிச்சட்டி நாற்றம் வீசுகிறது. அகப்பைகளைக் கழுவும் இக்கையா சூரர்களையும் கலங்க வைத்த செவ்வீரனை எதிர்க்கப் போகிறது? வேண்டாம்! என் தலைவியை மீட்க நான் வேறு யாரையாவது பார்த்துக் கொள்கிறேன். நீ சட்டி துடைக்கத்தானே போ”, என்றாள்.

காரெத் சற்றும் அவள் அவமதிப்பைப் பொருட்படுத்தாமல் பணிவுடன், “அம்மணி! செவ்வீரனை எதிர்க்க முடியாவிட்டால் இறப்பது நான்தானே? நான் இறந்தால் கேடொன்றும் இல்லை. என் பணியை முற்றுவிக்க ஆர்தரிடம் வேறு வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் வெற்றி பெற்றால் உங்கள் அவமதிப்பெல்லாம் எனக்கும் என் தலைவர் ஆர்தருக்கும் பெரும் புகழாக மாறுமன்றோ?” என்றான்.

லினெட் அப்போதும் சீறிக்கொண்டு, “வெற்றி பெற்றால்.!... அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா தான்," என்று குத்தலாகப் பேசிவிட்டுக் குதிரையை அதட்டி முன் செலுத்தினாள்.