பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அப்பாத்துரையம் – 40

லினெட், “இவன் வீரன் அல்லன், கறிச்சட்டி கழுவும் வேலைக்காரன்" என்றாள்.

காரெத், “அவள் கூறுவது முழுப்பொய்; என் கை சிலகாலம் கறிச்சட்டி கழுவியது உண்டாயினும் என் நாக்கு இவ்வளவு பொய் சொல்லி யறியாது; என் செவியும் இவ்வளவு பொய் சொல்லிக் கேட்டதில்லை” என்று கூறிவிட்டுக் குழலை ஊதினான்.

காரெத்தும் கறுப்பு வீரனும் நெடுநேரம் சண்டை யிட்டனர். இறுதியில் கறுப்பு வீரன் கொல்லப்பட்டு வீழ்ந்தான். தன் கவச சத்தையும் தலையணியையும் விடக் கறுப்புவீரன் கவசமும் தலையணியும் சிறந்தவை என்று கண்டு காரெத் அவற்றை அணிந்துகொண்டு புறப்பட்டான்.

சற்றுத் தொலைவு சென்றதும் கறுப்பு வீரனின் உடன் பிறந்தானாகிய பச்சை வீரன் எதிரே வந்தான். அவன் காரெத்தைக் கறுப்புவீரன் என்றெண்ணி வணக்கம் செய்யப்போனான். அதற்குமுன் மாது அவனைத் தடுத்து, 'இவன் உன் உடன் பிறந்தானுமல்லன்; உன்னைப் போன்ற வீரனுங்கூட அல்லன்; மிக இழிந்த பிறப்புடைய ஒரு சமையல் வேலைக்காரனே. அதோடு அவன் உன் உடன் பிறந்தானாகிய கறுப்பு வீரனைக் கொன்று விட்டு அவன் உடையையும் அணிந்து வந்திருக்கிறான். அவனிடம் பழிக்குப்பழி வாங்கி என்னைப் பிடித்த இப்பீடையையும் அகற்று வாய் என்று நம்புகிறேன் என்றாள்.

நன்றிகெட்ட லினெட்டைக் கடுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டுக் காரெத், பச்சைவீரனைத் தாக்கத் தொடங் கினான். காரெத்தின் வாள்வீச்சைத் தாங்க மாட்டாமல் பச்சைவீரன் பணிந்து உயிருக்கு மன்றாடினான். காரெத் தான் அழைக்கும்போது தன் வீரருடன் ஆர்தர் அரண்மனைக்கு வந்து மன்னிப்புப் பெற்று அவர் பணியில் ஈடுபடவேண்டும் என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு அவனை விடுவித்தான். அவனும் நன்றியுடன் காரெத்தை வணங்கிச் சென்றான். போகும்போது மாதை நோக்கி, ‘பெருந்தன்மை மிக்க இவ்வீரனை அவமதிப்பது உனக்கு அழகன்று; நன்றியுமன்று; அவனைப் பாராட்டி மேன்மை அடைக" என்று கூறி அகன்றான்.