பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

39

கணவனுடன் காட்டிற்குள் செல்வதுபற்றி அவளுக்குக் கவலையேயில்லை. ஆனால், அவனுடன் உரையாடக் கூடாதென்பது அவளுக்கு மிகவும் துன்பந்தந்தது. ‘அவ்வளவுக்கு அவன் அன்பை இழக்க நான் என்ன செய்திருப்பேன்' என்று பலவகையில் ஆராய்ந்து ஆராய்ந்து அவள் தன் மனத்தைப் புண்படுத்திக் கொண்டே சென்றாள்.

கெரெய்ன்டு மனத்திலும் நான் இவளைத் தெய்வமாகத் தானே நடத்தினேன்? எனக்கா இந் நன்றிகொன்றதனம் என்ற எண்ணமெழுந்து வாட்டியது.

அவர்கள் சென்ற காட்டுவழி முன் போர்வீரராயிருந்த கொள்ளைக்காராக மாறித் திரிந்த கொடியோர் வாழ்ந்த இடமாயிருந்தது.

இருவரும் ஒரு மேட்டிலேறிச் சென்ற சமயம் எனிட் ஓர் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். புதரில் மறைந்திருந்த மூவர் தமக்குள் பேசிக்கொண்டது அவள் காதிற்பட்டது. ஒருவன் இந்த அழகிய மாதைப் போகவிடு. அந்தக் கோழைப்பயலைப் பின்னாலிருந்து நொறுக்கிவிட்டு எல்லாம் ஒரு கை பார்க்கலாம்’ என்றான். அடுத்தவன் ‘சரிசரி' என்றான்.

கணவன் உயிருக்கு அஞ்சிய காரிகை அவன் ஆணையை மீறத் துணிந்தாள். 'இதோ மூவர் உங்களை எதிர்க்கக் காத்திருக்கின்றனர்' என்றாள்.

கெரெய்ன்டு கடுமையாக 'அந்தமட்டும் உனக்கு நன்மைதானே! ஆயினும், யாரும் என்னை வென்றுவிட முடியாது என்று அறி என்று கூறித் தன் ஈட்டியை எடுத்தான்.

கெரெய்ன்டு முதலில் பெற்றிருந்த புகழைப்போலவே அவனைப்பற்றிப் பின்னாலெழுந்த இகழும் காடுவரை எட்டியிருந்தது. ஆனால், பின்னது எவ்வளவு பொய்யானது என்பதை அம்மூவரும் விரைவில் உணர்ந்தனர். ஒருவன் நெஞ்சில் கெரெய்டின் ஈட்டி ஊடுருவிப் பின்புறம் சென்றது. மற்ற இருவரும் வாளுக்கிரையாயினர்.

கெரெய்ன்டு இறந்த வீரரின் கவசத்தை அகற்றி அவர்கள் குதிரைமீதேயிட்டுத் தன் குதிரையுடன் அவற்றையும் ஒட்டி முன்செல்லுமாறு எனிடுக்கு ஆணையிட்டான்.