பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 40

ஏழை எனிட் அழுதுகொண்டிருந்தாள்

நான்கு குதிரைகளை ஓட்டுவதில் அவள் படுந்துன்பங்கண்டு அவன் இரங்கி, சற்று அண்டிவந்து உதவினான். அவளுக்கு அஃது ஆறுதலா யிருந்தது. ஆயினும், தன் எச்சரிக்கை கேட்டு அவன் கூறிய மறுமொழிகளின் பொருளறியாமலும் அவற்றுள் புதைந்து கிடந்த வெறுப்பைக் கண்டும் அவள் மனமாழ்கினாள்.

பின்னும் ஒரு தடவை வேறு சில திருடர் மறைந்து கெரெய்ன்டை எதிர்க்க முற்பட்டனர். இத்தடவையும் எனிட் எச்சரிக்கையின்பேரில் கெரெய்ன்டு மூவரையும் தென்புலத்துக்கனுப்பினான். இப்போதும் எனிடிடம் அவன் கடுமை நீங்கவில்லை. முன்னைய மூன்று குதிரைகளுடன் பின்னும் மூன்று குதிரைகள் அவள் பொறுப்பில் விடப்பட்டன.

ஒரு நாள் முழுவதும் குதிரைமீது சென்றதால் இருவருக்கும் பசி காதடைத்தது. வெறுப்பிடையும் கெரெய்ன்டிற்கு எனிட்மீது இரக்கம் பிறந்தது. அவர்கள் காட்டைக்கடந்து ஓர் ஊரை அடைந்ததும் அறுவடைக் களத்துக்கு உணவு கொண்டு சென்ற ஒரு பையனை அழைத்து அவன் உணவு கோரினான். எனிட், கணவன் காட்டிய வெறுப்பினால் உணவில் விருப்பஞ் செல்லவில்லையாயினும், உண்பதாகப் பாசாங்கு செய்தாள்.