பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. லான்ஸிலட்டும் ஈலேயினும்

பிரிட்டனின் பேரரசரான ஆர்தர், கார்ன்வாலையடுத்த லையானீஸ்* என்ற நாட்டில் வாழ்ந்து வந்த தம் வளர்ப்புத் தந்தையாகிய ஆண்டன் பெருந்தகை மாளிகைக்குச் சென்று தம் (வளர்ப்பு) உடன்பிறந்தாருடன் பொழுதுபோக்கியிருந்தார். ஒருநாள் அவர் தாம் இளமையில் திரிந்த காடுகளில் சென்று நெடுநேரம் உலாவினார். உச்சிவேளையாயிற்று. ஆயினும் எதிர்காலக் கனவுகளிலாழ்ந்து கால் சென்ற வழியே சென்றதனால் அவர் வழிதப்பி அதற்குமுன் நெடுநாள் மனிதர் கால்படாத ஒரு குன்றின் அருகே வந்து விட்டார். அக்குன்றில் ஒருகாலத்தில் ஓர் அரசனும் அவன் உடன்பிறந்தானும் நாட்டின் அரசிருக்கைக்காக ஒருவரை ஒருவர் வாளுக்கு மற்றவர் ஒரே சமயத்தில் இரையாய் விட்டதாகக் கூறப்பட்டது. அக்கொடியர் இருவர் உயிர்களும் பேயாய் நின்று ஒருவரை ஒருவர் அதட்டி வந்ததாக மக்கள் கூறலாயினர். ஆகவே அவ்விடத்தில் இரவிலன்றிப் பகலில்கூட யாரும் செல்வதில்லை.

ஆர்தர் இக் கதையைக் கேட்டிருந்தாரானாலும் தாம் செல்லும் அக்குன்றுதான் அஃது என்பது அவருக்குத் தெரியாது. தெரிந்தாற்கூட அச்சம் என்பதே இன்னது என்று அறியாத தூய வீரனாகிய அவர் பின்னடைந்திருப்பார் என்று சொல்வதற் கில்லை. மற்றும் தீக்குணங்களாகிய அகப்பேய் உள்ளத்திருந்தால் அல்லவோ புறப்பேய்கள் அணுகும். அரசர் குன்றையெல்லாம் சுற்றிப் பார்த்தபின் அதன் சாரலில் ஓர் அழகிய ஏரியைக் கண்டு அதனை நோக்கி இறங்கி வந்தார். அப்போது அவர் காலிற்பட்டு ஏதோ ஒன்று நொறுங்கிற்று. அவர் குனிந்து அது யாதென்று நோக்க அது நெடுநாள் வெயிலாலும் மழையாலும் கிடந்து இற்றுப்போன ஒரு மனிதன் எலும்புக்கூடு என்று கண்டார். (அஃது உண்மையில் நாம் மேற்கூறிய அரசன் எலும்புக்கூடே.)