பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. குடிமையின் உரிமையும் பொறுப்பும்

தனி மனிதன் சமூகத்தில் ஓர் உறுப்பு. ஆனால், மனு மனிதன் வாழ்வு சமூக வாழ்வில் ஓர் உறுப்பன்று. சமூக வாழ்வே தனிமனிதன் வாழ்வின் ஒரு பகுதியாய் அமைகிறது என்று கூறலாம். ஏனெனில், அவன் வாழ்வின் முற்பகுதி சமூக வாழ்வை அவன் மேற்கொள்வதற்கான பயிற்சி முறைப்பகுதியே. இது தனி வாழ்வுக்கு வேர் அல்லது அடிப்படைப் பகுதியாயினும் அஃது ஓர் அடிப்படை உறுப்பே.

தனிமனிதன் பிறக்கும் போது சமூகப் பண்புக்குப் புறம்பான எந்தப் பண்பையும் அவன் தனக்கே உரியதாகக் கொண்டு பிறக்கவில்லை. தனி மனிதனுக்கே உரியதாகத் தோற்றும் உடலானது உயிர்ப்பண்பு மரபிலும் சமூகப் பண்பு மரபிலும் அவனுக்கு வந்தமைந்த ஒரு கருவி மட்டுமே. சமூகப் பண்பின் மரபில் வந்த இக் கருவி, சமூகப் பண்புகளை அவன் எளிதில் மேற்கொள்ள உதவுகிறது. கருத்தோற்றத்திலோ, பிறப்பிலோ இக் கருவி முழு நிறை மனித உடலாய் பிறக்கவில்லை. கட்டிளமைக் காலம் அல்லது முழு மலர்ச்சிக்காலம் (Adolescence) வரை அதன் உறுப்புகள் சமூக மரபில் நின்றே படிப்படியாக வளர்ந்து முதிர்ச்சி பெறுகின்றன.

முழு உறுப்புகள் வளர்ச்சிபெறும் இதே சமயத்தில், தாய், தந்தையர், உறவினர், தோழர் தூண்டுதலுடன் மனிதன் அவர்கள் செயலைப் பார்த்துச் செயலாற்றவும்; தாய்மொழி என்ற சமூக மரபுத் தொகுதி வாயிலாக, அவர்கள் சொல்வது கேட்டுச் சொல்லவும்; எண்ணுவது, அறிவது உணர்ந்து அறியவும் உணரவும் பழகிக் கொள்கிறான். உடலின் வளர்ச்சி முற்றுப் பெறும் முழுமலர்ச்சிப் பருவமே அவனிடம் சமூகப் பண்புகள் வளர்ச்சி பெற்று முழு முதிர்ச்சியடையும் பருவமாயும் அமைகிறது.