3. இன்னாமை நீக்கும் இன்னெறி
தீமை என்பது, எல்லையற்றுப் பரந்த இன்ப வெளி யிலே, குறையுருவமுடைய நம் நிழல்போன்ற ஒரு தற்காலிகப் போலிப்பண்பே என்றும்; நம் சூழலும் நாம் காணும் உலகமும் நாமாக வருவிக்கும் நம் நிழலே என்றும் கண்டோம். இக்காட்சியறிவிலிருந்து உறுதியாக, ஆனால் எளிதாக நடந்து மேற்சென்று "உலகமைதியின் காட்சி" என்ற உயர் படிக்குச்
செல்வோம்.
எதுவும் இன்றியமையாக் கட்டுப்பாடுடைய இயற்கைச் சட்டத்தினின்றும் வழுவாது என்பதையும், காரணகாரியத் தொடர்பு இல்லாமல் எதுவும் தன்னியல்பாய் நிகழ்வதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டோம் “மனிதன் தான் விதைத் ததைத்தான் அறுக்கிறான்; தானே தான் அறுக்கிறான்.” என்ற உண்மைகள் எல்லையில்லாக் காலத்தின் வாயிலின்மீது அழல்நிற எழுத்துக்களில் தீட்டப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.
தீயில் கையிட்டவன் சுட்டபுண்ணால் துன்புறுவது உறுதி. சுட்ட புண் ஆறும்வரை அவன் துன்பப்படத்தான் செய்வான். தீயைத்திட்டுவதாலோ தீயின் அற்றலை வேண்டி வணக்கவழிபாடு செய்வதாலோ அவன் யாதொரு பயனும் அடைய மாட்டான். புறப்பொருளில் காணும் இதே அமைதி அகத்திலும் ஆட்சி செய்கிறது. வெறுப்பு, சீற்றம், அழுக்காறு ஆகியவை பலநிற அனற்பிழம்புகள். எரியும் இயல்புடைய அப்பிழம்புகளைத் தொட்டவன் தீமையை நுகர்ந்ததாக வேண்டும். ஏனெனில் இச் செயல்கள் இயற்கையின் அமைதியை அறியாதவன் செய்த அறியாச் செயல்கள். அவற்றின் விளைவாகிய தீமை, இயற்கைமீறிய அச்செயல்களின் அமைதிக் குலவை அகற்றும் இயற்கையின் எதிர்செயல்கள் அல்லது சரியீட்டுச் செயல்களே யாகும்.