திருநிறை ஆற்றல்
195
புதிய ஆற்றலைப் பெறுவதைவிடப் பழைய ஆற்றலைப் புதிதாகப் பயன்படுத்தும் திறமே பெரிது. ஏனெனில், இயற்கையில் புதிய ஆற்றல் என்ற எதுவுமே கிடையாது. உன் இயற்கை ஆற்றலை நீ நன்கு பயன்படுத்த வேண்டுமானால், அதை வீணழிவு செய்து கெடுக்காமல் பேணவேண்டுவது உன் முதற்கடமை ஆகும். அறிவில்லாத வர்கள் தங்கள் கைப்பொருளை வீண்காரியங்களில் செல் விடுவது போலவே, தங்கள் உடலாற்றலையும், உள ஆற்றலையும் தங்கள் சூழ்நிலை வாய்ப்புக்களையும் தகாத சிறு செயல்களில் வீணே ஈடுபடுத்திப் பயனற்றன ஆக்கி அழிக்கின்றனர். எனவே அறிவுடையவன் பொருளில் சிக்கனத்தை நாடிச் செல்வம் ஆக்குவது போல, உடலாற்றலிலும் சூழ்நிலை வாய்ப்புக்க ளிலும் அதேவகையான சிக்கனத்தைப் பேணப் பயில வேண்டும். எடுத்துக்காட்டாக, தீயவழியில் அவாக்களை ஓடவிட்டவன், தன்னலச் சிறுதிற இன்பங்களில் ஆர்வங்களைப் பயிலவிட்டவன், நல்வழிகளிலும் சரி, தனக்கும் தன் சூழலுக்கும் நிலையான ஆக்கவளர்ச்சி தரும் பொது நலவழிகளிலும் சரி, அவற்றின் திறங்களைக் குறைத்து விடுகிறான். வீணுரை யாடல், வீணின்பம் ஆகியவற்றால் இயற்கையின் இன்பச் சேமநலத்தை அழிவுக்காளாக்குகிறான்.
மேலீடாகப் பார்ப்பவருக்கு இயற்கையின் அழி வாற்றல்கள்தான் பெரிது என்று தோற்றும். புயல், மின்னல், இடி,சூறாவளி, காட்டுத்தீ ஆகியவை காலத்தின் சிற்றெல்லையில் பேராற்றல்களாகத் தோற்றுகின்றன. ஆனால் காலங்கடந்த இயற்கையின் அமைதியில் அவை கண நிகழ்ச்சிகளே. திண்ணிய பாறைகளுக்கு உடையாத அலையின் மோதல், அலைதாங்கி களில் பட்டு உடைதல் போல, இவ்வழிவாற்றல்கள், ஊக்க ஆற்றல்களாகிய உயிராற்றல்களுக்கு நாளடைவில் உடைவது உறுதி.கடலின் ஆழத்தில் அலையுடன் அலையாய் இயங்கும் பவளப்புழுவின் கூடுகள், ஆழ்கடலில் பவளக் கொடிகளாகி வளர்ந்து, பவளக்குன்றுகளாகவும், பவளத் தீவுகளாகவும், நாளடைவில், பிறபாறைகள் உடைந்தாலும் அவற்றின் அழிவு கடந்து எஞ்சிய பகுதியாகவும் நிலவுகின்றன. அழிவின் கூளங்களிடையே பாசியும் காளானும் பயிரிடுவாரின்றிப்