பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

அப்பாத்துரையம் – 43

வாழும் வாழ்வையோ நாடிக் கேடுறுபவரேயாவர். ஏனெனில், உழைப்பால் வரும் செல்வமே தற்சார்பும் தன்மதிப்பும் தரும். அதுவே பிறருக்குத் தீமைதராமல் பல சமயம் பிறருக்கு நன்மையாகவும் முடியும்.

வாழ்க்கைத் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு நன்மகனும் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளாவன:

“வாழ்விற்கு உரிமையற்றவனாக நான் வாழலாமா? வாழும் தகுதி எனக்கு வேண்டாமா? என் பெற்றோர் எனக்குப் பொருள் ஈட்டிவைத்திருந்தால், அவர்கள் எனக்குச் செய்த கடமைக்கு ஈடாக நான் என்ன செய்யக்கூடும்? என் நாடு என்னையும் என் குடியையும் உயர்நிலையில் வைத்திருக்கிறதானால், அதற்கு நான் செய்யும் கைம்மாறு யாது? அத்தகைய உயர்குடிப்பேறு எனக்கு இல்லையானால், அதை என் பின்னோர்கள் பெறச் செய்யும் வழியாது?" என்பதே.

இக் கேள்விகளுக்கு அவனுக்குக் கிடைக்கக்கூடும் விடை ஒன்றே. செல்வக்குடியில் பிறந்ததனால் உழையாமல் வாழ்வதும், உழையாமல் செல்வக் குடியாளனைப் போல் வாழ எண்ணுவதும் செல்வம் உண்டுபண்ணுவதாகாது. பிறர் உழைப்பை உண்டு உலகுக்குச் சுமையாய் இருப்பதேயாகும். அஃதாவது வாழத் தகுதியின்றி, வாழும் உரிமையின்றி வாழ்வதேயாகும்.

உழைப்பின் பெருமை பற்றிப் பல அறிஞர் பலவாறாகப் பராட்டியுள்ளனர். "முயற்சி திருவினை ஆக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்,” (குறள். 616) என்று ஒழுக்க நூலார் வரைந்துள்ளனர். ஆயினும் தம் சமூக வாழ்வில் எக்காரணத் தாலோ பெரும்பாலோர் உழைப்பை மதிக்காதிருந்து வருகிறார்கள். இங்ஙனம் உழைப்பை மதியாதிருந்து எத்தனையோ நாகரிகங்கள் அழிந்து மண்ணோடு மண்ணாய்ப் போயிருக்கின்றன என்பதை அறிந்தும், உழையாத வாழ்வே நாகரிகம் என்ற எண்ணம் இன்னும் உலகைவிட்டு அகன்றபாடில்லை. உலகிற்கே நாகரிகத்துக்கு வழிகாட்டிய பண்டை எகிப்திய, பாபிலோனியப் பழங்குடி மக்கள்,கலைச்சிறப்பு வாய்ந்த கிரேக்கர், போர் வீரமிக்க உரோமர் ஆகியவர் யாவரும் உழைப்பை மதியாது உழைப்பாளர்களை அடிமைகளாக நடத்தியதானாலேயே அழிவுற்றனர் என்பதை வரலாறு எடுத்துக்காட்டும்.