பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

13

சிக்காது தன்னுழைப்பு, தற்சார்பு, தன்னறிவு, தற்பண்பு பேணி வாழக்கடவர்.

எளிய வாழ்வு என்பது மனித வாழ்வை வெறுத்த துறவிகளுக்குரியது என்றோ, மனித வாழ்வு வாழ இயலாத பஞ்சை ஏழைகளுக்கு உரியது என்றோ பலர் எண்ணி விடுகிறார்கள். இதனினும் தவறுடைய எண்ணம் எதுவும் இருக்க முடியாது. எளிய வாழ்வு என்பது இன்பம் வெறுத்த வாழ்வு அன்று, உண்மையில் அதுவே இன்பம் நிறைந்த வாழ்வு. நல்உணவு, நல் ஆடை, நல் அணிமணி, இன்பப் பொருள்கள் ஆகியவற்றை வெறுப்பதோ, ஒதுக்குவதோ எளிய வாழ்வு ஆகாது; அவை வறுமை வாழ்வு அல்லது துன்ப வாழ்வு மட்டுமே. எளிய வாழ்வு என்பது இவ்வின்பங்களை அவற்றின் பயன் நோக்கி அறிவுடன் பயன்படுத்துவதேயாகும். தோற்றத்திற்காக பிறருக்குக் உயர்நிலைக்காக, உடலைக்

கண்ணுறுத்தும்படியான

கெடுக்கத்தக்க தற்காலிகப் புலனுகர்வுக்காகப் பயன்படும் தீய ன்பங்களே எளிய வாழ்க்கைக்கு மாறான பகட்டு ஆரவார வாழ்வின் பண்புகள் ஆகும். எளிய வாழ்க்கையினர் விரும்பும் உணவு, தற்காலிகச் சுவையுடன் நிலையான உடல் நலமும் தரவேண்டும். அவர்கள் மேற்கொள்ளும் ஆடை தற்காலிகப் பாதுகாப்பும், நிலையான உடல் நலமும், காண்பவர்க்கு நன்மதிப்புணர்வும் தரவேண்டும்.

எளிய வாழ்வு வாழ்பவன் கீழோரைக் கண்டு சீறவோ, அடக்குமுறை ஆர்ப்பரிப்புக் கொள்ளவோ, இறுமாப்பும் வெறுப்பும் அடையவோ மாட்டான். மேலோரைக் கண்டு அஞ்சவோ, அடங்கி ஒடுங்கவோ, தொண்டூழியம் செய்ய விதிர் விதிர்க்கவோ மாட்டான். அவரவர் நிலைக்கேற்ற படி அவன் யாவர் மாட்டும் ஒத்த அன்புடனே தான் ஒழுகுவான். இத்தகைய எளிய வாழ்வே உண்மையில் உயர் நாகரிக வாழ்வு ஆகும். உயர்கலை வாழ்வும் இதுவே, இம்மறை நுட்பம் உணராது, கண்டபடி இன்பப்பொருளும், ஆடையும் புனைபவனை நாகரிக மக்கள் நாகரிகமுடையவன் என்று கூறமாட்டார்; பட்டிக் காட்டான் என்பவர். அது போலவே பகட்டுக்காக எளிய வாழ்வு வாழ்பவனையும், உண்மை நாகரிகமுடையவர் பாராட்ட மாட்டார்கள். அவனையே பகடி, அகடி, விகடி எனக் கடிந்து நகையாடுவர்.