பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

15

செயல்களை என்னென்பது? உண்மையில் பயனை எதிர்பாராத செயல் என்பதும் வரையாத கொடை என்பதும் கொடுப்பவன் தன் தனிப்பட்ட நலன் கருதிச் செய்யாத உதவி என்றும், தனக்கு வரும் கைம்மாறெண்ணி அளந்தீயாமல், தேவையாளர் தேவையளவை எண்ணி ஈவது என்றுமே பொருள்படும்.பண்டை ஆன்றோர்களின் சொற்பொருள் வழக்கறியாத இடக்காலக் குறையறிவினரே, இச்சொற்களின் வெண்பொருள் கொண்டு கதை கூறு மயக்குற்றனர் என்னலாம். தாமே எளிய, அஃதாவது பயன் கருதிய வாழ்வு வாழ்பவர் பிறர்க்கு உதவியினும் கொடை வழங்கினும் அதுபோல் எளிய, அஃதாவது பயனுடைய வாழ்வுக்கான உதவியும் கொடையுமே வழங்குவர் என்பது தேற்றமன்றோ?

ஆகவே, உழைப்பவர் எளிய வாழ்க்கையுடையவர் ஆகியவர்கள் தம்மைப்போல உழைப்பவர் அல்லது எளிய வாழ்வை நாடுபவர்களுக்கு அவர் நலத்தையும் உழைப்புலகின் நிலையான நலத்தையும் பெருக்கும் முறையில் கொடுக்கும் அல்லது அளிக்கும் கொடையும் உதவியுமே வரையாக் கொடை என்றும், பயன் காணா உதவி என்றும் விதந்துரைக்கப்பட்டன. இரு வழியிலும் கொடுப்பவர் பயனை எதிர்பார்ப்பதில்லை யாயினும் கொடையாளியை அக்கொடை எளிதில் மீட்டும் அடையுமாயின், அஃது உதவியின் பாற்படும். அஃது அவன் இனம், அஃதாவது மனித வகுப்பை அல்லது நாட்டையே சாருமாயின் அது கொடையின் பாற்படும். செயலின் பயன் நோக்கி இவை இருவகையானாலும், செய்பவன் பண்பில் இரண்டும் ஒன்றே.

உயர் பண்பாளர் தொடர்புறவுடைய உறவினருக்கும் நண்பருக்கும் உதவும் போதும், தொடர்புறவில்லாத ஏதிலர்க்கு உதவும் போதும் ஒரே உணர்ச்சியுடன் தான் உதவுகின்றனர். ஆனால்,கொடுப்போர் பெறுவோர் ஆகிய இருசாராரிடையேயும் உள்ள தொடர்புறவே அவற்றின் பயனில் சிறிது மாறுபாடு உண்டுபண்ணுகிறது. இது காரணமாகவே,

“உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து”

(குறள். 105)