பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

23

தோழமையைப் போலவே கல்வியிலும் நாம் அடையும் பயன், நம் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது. நாம் விரும்பிக் கற்கும் கல்வியே நம் உளத்தில் பதிந்து பண்படுத்தும் கல்வி ஆகும். கல்வி என்பது மக்கள் விலங்கு நிலையிலிருந்து இன்றைய நிலைவரை அடைந்துள்ள முன்னேற்றத்தின் விளைவாக ஏற்பட்ட அறிவுத் தொகுதிக்கான பயிற்சியே யாகும். இவற்றின் தொடக்க வளர்ச்சிப் பண்பாடுகள் விலங்குக்கும் மனிதனுக்கும் பொதுவான உணர்ச்சிப் பண்புகளாதலால், இவை எல்லார் உள்ளங்களிலும் இயற்கை விரும்பந் தூண்டுபவை. அறிவியற்றுறை களைவிடக் கலைகளும், கவிதையும், கதையும் மக்கள் மனதை எளிதாக இயக்குவதன் காரணம் இதுவே. ஆனால் நல்லகாலமாக, கலைகளில் உயர்ந்த கலைகள் மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன வாதலால், இவை இனிய மருந்துபோல், இன்பமேயன்றிப் பயனும் தருகின்றன. இதற்கு மாறாக அறிவியல்கள் உயர் பண்புடைய சிலருக்கன்றி ஆர்வந்தூண்டு தலரிது. மக்களின் ஆதாய நோக்குக்கு அறிவியல் பயன் பட்டிராவிடில், அவை இன்று பரந்திருக்கும் அளவுக்குக் கூட பரந்திருக்க முடியாது. இதற்குச் சான்று வேண்டுமானாலும், அறிவியலின் அறிவியலான கணக்கியலிலும் கலைசார் அறிவியலான இலக்கணத்திலும் இன்னும் பொதுவாக இளைஞர் கசப்பு நீங்கவில்லை என்பதை எடுத்துக் காட்டலாம்.

கணக்கியல் எல்லா இயலுக்கும் வாணிகத்துக்கும் அடிப்படையாதலால், பயன் கருதியவர் அதில் முனையாதிருப்ப தில்லை. அதுபோலவே இயல்கள் அனைத்திற்கும், கலைகளில் உயர் கலையாகிய இலக்கியத்துக்கும், வாழ்க்கைக் கலையாகிய மொழிக்கும் இலக்கணம் அடிப்படை இயலாயிருப்பதனால், அஃது இன்றியமையாது கற்கப்படவேண்டியதாகும். திருத்தமாக, தெளிவாகப் பேசவும் எழுதவும் தெரியாதவன் நாகரிகத்தின் புறத்தோற்றத்தைக்கூட எட்டுதல் அரிது. உயர்பணிப் பொறுப்புடைய பலரும், உழைப்பிலும் தன்மறுப்பிலும் மிக்க படைவீரர் போன்றவரும் அறிவுத் துறையிற் சிறந்த பலரும் எண்ணியதை உரைப்பதிலும், உரைப்பதை எழுதுவதிலும் இடர்ப்பாடுடையவராயிருப்பது காணலாம்.

உயர் துறைகளில், திறம்பட எண்ணுவதில்கூட இலக்கண இலக்கிய அறிவும், மொழி அறிவும் மிகவும் இன்றியமையாதவை.