பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

|--

அப்பாத்துரையம் - 43

ஏனெனில், மனித நாகரிகத்தின் உயர்தரக் கருத்துக்கள், கலை அறிவியற் கருத்துக்கள் யாவும் நாகரிகமொழிகளில் உட்கூறாகவே, உள் உறுப்பாகவே அமைந்து, பிறமொழிகளில் எளிதில் மொழி பெயர்க்கக்கூடாதவையாகவும், மொழி பெயர்த்தாலும் பயன் தரக் கூடாதவையாகவும் உள்ளன. மொழியுடன் மொழியாக, மொழியின் வளர்ச்சியுடன் வளர்ச்சியாக வளர்ந்த இவற்றை, அம் மொழியின் அமைப்பையும் அச் சொல் வரலாறுகளையும் உணர்ந்தாலன்றி, முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது. எனவே, நன்கு பேசுவதற்கும் எழுதுவதற்கும் மட்டுமின்றி, நன்கு சிந்திப்பதற்கும் இலக்கண இலக்கிய அறிவும், மொழியறிவும் இன்றியமையாதவை ஆகும்.

ஆங்கிலமொழியின் கலை, இயற்சொற்கள் பலவும், இலத்தீன், கிரேக்கம் முதலிய வழங்காமொழிச் சொற்களாய் அமைந்துவிட்டமை இவ்வகையில் ஒரு பெருத்த இடர்ப் பாடேயாகும். இவ்வழங்காமொழிச் சொற்களை யறிந்தன்றிப் பொதுமக்கள் அவற்றால் முழுப் பயனடையவும், அவற்றின் உள்ளார்ந்த பண்பில் தோயவும் முடிவதில்லை. ஆயினும், இலக்கணம் பயில்வர் அச்சொற் பொருள்களையும் ஆராய வேண்டுயவராதலால், அப்பண்புகளை ஓரளவு துணிய இலக்கியம் உதவும் என்பதில் ஐயமில்லை. 18 ஆம் நூற்றாண்டில் பிறமொழிச் சொல்லாட்சி ஆங்கிலத்தில் குன்றிவிட்டதனால், அதன் பிற்பட்ட வளர்ச்சி பெரும்பாலுந் தாய்மொழியடிப் படையிலேயே அமைந்து வருவதும் கவனிக்ககத்தக்கது.

இலக்கணம் மொழியின் வழுக்களகற்றும்; இலக்கிய வழக்குகளறிவிக்கும்; பேசுவதைத் திருத்தமாகப் பேசுவதற்கும், எழுதுவதைத் திருத்தமாக எழுதுவதற்கும் இஃது அடிப்படை அறிவைத் தரவல்லது; ஆனால் திறம்படப் பேசுதல், எழுதுதல் ஆகிய மொழித் திறங்களுக்கு இவை போதா. சட்டியிலுள்ளது தான் அகப்பையில் வருமாதலால், மனதில் கருத்தும் சிந்தனையும் இருந்தாலன்றிப், பேச்சிலும் எழுத்திலும் அவை மிளிரமாட்டா. இவ்விரண்டையும் தருபவை நூல்களே, இலக்கிய நூல்கள் இவற்றில் முதல் தரமானவை. இவை கருத்துக்களைத் தருவதுடன் வாழ்க்கையையும் நாட்டுப் பண்பையும் அப்படியே படம் பிடிக்கின்றன. கலையுணர்ச்சியுடனும் அழகுணர்ச்சியுடனும்