பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

29

இருதலையும் எய்தும்," (நாலடியார் 114) என அறம் பொருள் இன்பம் ஆகியவற்றிடையே பொருளே மற்ற இரண்டிற்கும் அடிப்படையானதென்று அறவோர் வகுத்தது இதனாலேயே

ஆகும்.

பொருளில்லாமலோ, அல்லது பெருள் இடப்பாட்டுக் கிடையிலோ உலகில் பலர் பல அருஞ்செயல்கள் செய்துள்ளனர் என்பதை நாம் இங்கே மறக்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. "பொருள் பெரிதன்று" அன்பே பெரிது; பொருள் பெரிதன்று அறிவே பெரிது,” என்று பல ஒழுக்க நூலார் வற்புறுத்தி கூறியிருப்பதையும் நாம் இங்கே புறக்கணிக்கவில்லை.

உலகில் பல அறிஞர், கலைஞர், கவிஞர், சமூகத் தொண்டர், நாட்டுத் தொண்டர், உலகத்தொண்டர் ஆகியவர்கள் தம் வாழ்க்கை வருவாய் பற்றிய எண்ணம் சிறிதுமில்லாமல், தத்தம் துறையில் உழைத்துப் பீடு பெற்றுள்ளனர். பலர் சொல்லோணா வறுமை துன்பத்திடையே உலகோர் போற்றும் உயர்நிலை அடைந்துள்ளனர். இத்தகையோர் வரலாறுகளைப் படிக்கும் இளைஞர் பலர் பொருளினும் கலை அல்லது அறிவு அல்லது தொண்டு சிறப்புடையது என்ற எண்ணங் கொள்வது இயல்பே. இது தவறுமன்று; ஆனால், பல இளைஞர் எண்ணம் இம் மதிப்புடன் நிற்பதில்லை. இப்பெருஞ் செயலாளர்களைப் பின்பற்றுவதாக எண்ணி அவர்கள் பொருளிலும் பொருள் சார்ந்த வாழ்விலும் அக்கரை செலுத்தாது, வலிய அவல வாழ்வை மேற்கொண்டு விடுகின்றனர். எனவே, ஒழுக்க நூலாரையே மயக்கும் இப்பொன் பூச்சிட்ட மயக்கத்திற்கு ஒரு விளக்கமும், அதனைப் பின்பற்றும் இளைஞர்கட்கு ஓர் எச்சரிக்கையும் தரவேண்டுவது இன்றியமையாததாகிறது.

ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் இரண்டு பெருங் கூறுகள் உண்டு. ஒன்று தனிமனிதர் வாழ்வு; மற்றது பொது வாழ்வு. இவற்றுள் பெரும்பாலான உலக மக்கள் பொதுவாழ்வை மறந்து, தனி வாழ்விலேயே முழுதும் கருத்துச் செலுத்தி விடுகின்றனர். இக்குறைபாடு சிறுமையுடையது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இம்மனப்பான்மையே விலங்கு மனப்பான்மையாகும்.

உண்மையில் விலங்குகளில்கூட உயர்தர விலங்குகளிடம் இம்மனப் பான்மை குறைந்து வருகிறது என்று கூறலாம்.