42
அப்பாத்துரையம் - 43
பணத்தின் பயன்களில் மிகச் சிறந்த பயன் கல்வி ஆகும். கல்வி பணத்தை ஈட்டும்; ஆனால், பணமில்லாமல் அது மதிப்புப் பெறும். அஃது ஈட்டிய பணத்தைக் காக்கும்; பணம் அழிவுற்றாலும் மீண்டும் அது பணத்தை ஈட்டும். பணம் தான் இருக்கும் வரை ஒருவனைச் செல்வனாக வைத்திருக்கும். பணம் போனபின், அதற்குரிய செல்வன்மகன் செல்வனாயிருக்க முடியாது. கல்வியோ மரபுரிமையாகக் குலத்தின் செல்வமாய்க் குடிவாழ்வை வளர்க்கும். இவ்வகையில் ஆண்கள் கல்வியினும் பெண்கள் கல்வி சிறப்புடையது. ஏனெனில் ஆண்கள் கல்வி பெண்களுக்குப் பரவாது. பெண்கல்வி ஆண்களுக்குப் பரவுவது உறுதி. மேலும், குடும்பத்தில் பிள்ளைகளுக்கு உள்ளார்ந்த பண்புகளை ஊட்டுபவர் பெண்டிரேயாதலால், அவர்கள் கல்வி மட்டும்தான் சமூகத்தின் கல்வியாய் வளரும். எனவே, வருவாயின் மிச்சத்தை வாழ்க்கை வைப்பாக மீத்துவைக்க விரும்புபவன், தன் கல்வி, கேள்வி பழக்க மேம்பாடுகளுக்கும், குடும்பத்தினர்,பெண் ஆண் குழந்தைகள் கல்வி கேள்வி, பழக்க மேம்பாடுகளுக்கும் செலவு செய்வதினும் உயர்ந்த பயனுடைய செயல் வேறு கிடையாது.
நாட்டுப்பற்றும், மனித உணர்ச்சியாகிய இரக்கமும் ஒழுக்க நூலாரால் அறமாகப் போற்றப்படுபவையானாலும், உண்மையில் மனிதன் பொருளியல் வாழ்வினும் குறைந்த பயனுடையவை அல்ல. அவை அறத்தொடு சார்ந்த உறுதிப் பொருள்களேயாகும்.
பணத்தை அழிவு செய்வதுடன் மனக்கவலைகளைப் பெருக்கும் செய்திகளுள் தலைமையானது வழக்குமன்றஞ் செல்வதே. குற்றத்துறை வழக்குகளில் பெரும்பாலும் நன்மக்கள் ஈடுபடுவதில்லை. குற்றத்துறை மன்றத்தையும், காவலர் துறையையும் அறிவது சிறைக்கூடத்தை அறிவதற்கான வழி என்பதை போலி மக்கள் கூட அத்துறை செல்லாது எச்சரிக்கையாயிருப்பர். ஆயினும், குடி, கடன் கொடுத்தல், வாங்குதல், கள்ளக் கையொப்பமிடல், அரசியற் பொருள் கையாடல் முதலிய குற்றங்களில் பகட்டான பொய் வாழ்க்கை வாழ்பவர் சிக்குவது எளிது; இச் செயல்களிலிருந்து விலகுபவர் இச் செயல்களி லீடுபவர்களின் தோழமை, நட்பு ஆகியவற்றிற்கு இடந்தந்தால், வழக்குமன்றம் ஏறவேண்டி வரக்கூடும். ஆகவே, இச்