பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 |-- அப்பாத்துரையம் - 43 நாகரிகத்தாலும் மறைக்க முடியாத உலகின் இழிவுச் சின்னமேயாகும். விற்பனைக் களத்திலும் பிற இடங்களிலும் விலைகூறுவதில் பெரும்பேரம் நடைபெறுவதுண்டு. பேரம் செய்பவர் யாவரும் உள்ளூர எத்தர்களே என்று கருதும் வழக்கத்தை நாகரிக உலகம் கைவிட்டு விட்டது. பழங்காலத் துருக்கி நாட்டில் வாணிகக் களத்தில் விலை கூறியபின், மறுவிலை கேட்டால், கடைக்காரர் வாங்கவந்தவர் தம்மை அவமதித்தாகக் கொண்டு அவருக்குப் பொருள் தர மறுப்பாராம்; சிந்தித்தால், இது சரி என்பது தெளிவாகத் தோன்றும். பேரம் செய்து முதலில் மிகுதி விலை கூறுபவர்கள், சூதுவாதற்றவர்களோ குருடரோ குழந்தைகளோ பொருள் பெற வந்தால் என்ன செய்யும் தகுதி உடையவர் என்பது கூறாமலே விளங்கும். எனவே பொய்விலை கூறுபவன்,பொய்யன், ஏமாற்றுக்காரன் சண்டாளன் ஆகிறான். ஒரு நல்ல இஸ்லாமியனுக்கும் இது அடாப்பழி எனத் துருக்கியர் கொண்டதில் வியப்பில்லை. இத் துருக்கியரிடமிருந்து நாகரிக உலகு இப்பாடத்தைக் கற்றுகொண்டால் எவ்வளவு நலமாயிருக்கும்? வாழ்க்கையில் எத்துறையிலும் பொய்யும் வஞ்சகமும் கொடியவை; மக்கள் நம்பிக்கைக்கும் வாழ்க்கை வாய்ப்புக்கும் அடிப்படையான வாணிக துறையில், இவை மன்னிக்க முடியாதவை. எனவே, தாழ்ந்த சிற்றூதியத்திற்காகவோ சிறு நலனுக்காகவோ பொய்கூறுவது ஒழுக்க முறையில் மட்டுமன்று, அறிவு முறையிலும் மிகக்கேடேயாகும். இன்று இது பேணப்படாததனால், தனிமனிதனை பாதிக்காதிருப்பினும், நாகரிகச் சமூக வாழ்வு இதனால் கேடடைந்தே வருகிறது என்பதில் ஐயமில்லை. இன்றும் கூட்டத்துடன் கோவிந்தா என்று பிறரைப்போல் பொய் தவிர்த்து, மெய் கூறுபவன் ஒழுக்கமுடையவனாயிருப்பதுடன் மட்டுமன்றி, நாளடைவில் வெற்றியும் பெறுவது உறுதி என்பதை அங்ஙனம் நடந்து பார்த்தவர் அறிவர். தீய தோழர்களை விலக்குவதனாலும், நல்ல தோழர்களைச் சார்வதனாலும் ஏற்படும் நன்மைகள் மிகப் பலவேயாயினும் அவற்றின் மிகமுக்கியமான பலன்கள் அவற்றால் தீய பழக்கங்கள் ஒழிவதும், நல்ல வழக்கங்கள் பெருகுவதுமேயாகும். உண்மையில்