பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள் 45 தீய தோழர்களைவிடத் தீய பழக்கங்களே மிகக் கொடியவை. அதுபோல, நல்ல தோழர்களைவிட நல்ல வழக்கங்கள் மிகநலம் தருபவை. ஏனெனில் தோழர்கள் எப்போதும் உடனிருப்ப வரல்லர் உடனிருந்தாலும் அவர்கள் தோழமைப் புறத் தோழமை மட்டுமே. ஆனால், பழக்கங்களும் வழக்கங்களும் என்றும் ஒருவனைவிட்டுப் பிரியாமலிருக்கும் அகத்தோழர்கள். அவர்கள் தனிமையிலிருக்கும்போதும், உறங்கும்போதும் உணர்வற்ற நிலையிலிருக்கும் போதும், அவை உடனிருந்து செயலாற்றிக் கொண்டே இருக்கின்றன. பலர் உணர்வோடிருக்கும்போது மறைக்கும் பழக்கங்கள் உணர்வில்லாத வேலையில் வெளிப்படக்காணப் பெறுவதுமுண்டு. செய்பவனை அறியாமலே, செய்யப்படும் தீவினைகளான, தூக்கத்தில் நடத்தல், மயக்க வெறியில் திருடுதல் ஆகிய புதுமைகள் இத்திறத்தவை. தோழர்களிடையே நெருங்கிப் பழகாதவர்களைவிட, நெருங்கிப் பழகும் நட்புரிமையுடையோரின் பண்புகள் ஒருவரிடம் எளிதில் பற்றி உறையும். வழக்கங்களிலும் பழக்கங்களிலும் இதே போன்ற வேறுபாடு உண்டு. தன்னுணர்வுடனும் அறிவுடனும் ஒருவன் அடிக்கடி செய்யும் செயல்களே, அவன் வழக்கங்கள் ஆகின்றன. இவற்றை அவன் எளிதில் மாற்றிக்கொள்ள முடியாதாயினும், முயன்றால் அவை மாற்றக் கூடாதவையல்ல. ஆனால், இவையே தன்னுணர்வு நிலையும் அறிவு நிலையும் தாண்டி உள்ளத்திலும் உள்ளுருப்புகளிலும் ஊறிவிட்டால், இவை அறிவுச் சார்பற்ற உணர்ச்சிப் பழக்கங்களும் செயற்பழக்கங்களும் ஆகிவிடுகின்றன அறிந்து செயலாற்றாத காரணம் அறியப்படாத இப்பழக்கங்களை எளிதில் மாற்ற முடியாது. இவை நல்லனவானால், பாலில் பழம் நழுவி விழுந்தது போன்ற அருமையுடையவையே. தீயனவானாலோ பாலில் நஞ்சு விழுந்த மாதிரிதான். ஆகவே பழக்க நிலையில் வருமுன்பே தீய வழக்கங்களைக் கைக்கொள்ளாதும் கடிந்தும் வருவது இன்றியமையாதது. நல்ல வழக்கங்களையே தேடிப் பயின்று, அவற்றைப் பழக்கமாக்கல் வேண்டும். அறிவு பெறுவதைவிட நல்ல வழக்கங்களைப் படியவைத்துப் பழக்கங்களாக்குவதே கல்வியின் இன்றைய குறிக்கோள்," என அறவோர் கருதுகின்றனர் என்பது இங்கே குறிக்கத்தக்கது.