64
அப்பாத்துரையம் – 43
பிளவுகளாகவும் மிக மெல்லிய காற்று பெரும் புயலாகவும் உருவெடுக்கும். கணவன் ஒன்றெனில் மனைவி அன்றென்பதும், மனைவி அன்றெனில் கணவன் நன்றென்பதும் காதலில்லாக், குடும்பங்களில் மிகுதி. இவற்றால் சிறு வேற்றுமைகள் சிற்றூடல் களாகாமல் பெரும் பிளவுகள் ஆகும். காதலுள்ள இடத்தில் பொய்ம்மைகூடப் பூவிற் சுரந்த தேனென இனிக்கும். காதலற்ற விடத்தில் மெய்ம்மைகூடப் பொய்ம்மை என்று ஐயுறப்படும். எனவே, இளமைக் கவர்ச்சியில் தோன்றிய காதல் இளமையுடன் மடிவதன்று; அது மனிதனைச் சமூக உறுப்பினனாக இயக்கி ஒரு நாகரிக இனமாக ஆக்கும் முதல் உணர்ச்சியேயாகும்.
காதலற்றவர் நோக்கு கடுகை மலையாக்கும் நோக்கு காதலர் நோக்கு மலையைக் கடுகாகக் கருதும் நோக்கு. இவ்விரண்டு நோக்குகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்தால் விலங்கு நிலைக்கும் மனித நிலைக்கும் உள்ள வேற்றுமையை உணரலாம். காதல் நோக்கு வாழ்க்கையைக் குறிக்கோளாக் கொண்டது. இடையில் வரும் தடங்கல்கள் காதலர்க்குக் கடத்தற்குரிய தடங்கல்களேயன்றி, தடையாதற்குரிய தடங்கல்கள் அல்ல. காதல் வாழ்வின் வெற்றி ஒருவர் வாழ்வின் வெற்றியன்று; இருவர் வாழ்வின் வெற்றியேயாதலால், குற்றம் யாருடையது. வெற்றி யாருடையது. என்ற ஆராய்ச்சியில் காதலர் புகுவதில்லை. புகினும் விளையாட்டின்பம் நாடிப் புகுமேயன்றி, வெற்றிப் பண்புடன், போட்டி எதிர்ப்புப் பண்புடன் புகார். ஆனால், காதலற்றவர் நோக்கு வாழ்க்கை நோக்கன்று; இருவர் வெற்றி விருப்பன்று. அஃது இன்பநோக்கு, ஒருவர் வெற்றி நோக்கு. அது தடங்கல்களைத் தடைக் குரியவையாகவே வரவேற்கிறது. காதற் ‘போராட்டத்தில்' வெற்றியுண்டு; தோல்வியில்லை. ஏனெனில் அவர்கள் நாடும் வெற்றி இருவர் வெற்றியாதலால், அதில் வென்றவர் தோற்றவர் இருக்க முடியாது. அதுபோலவே காதலர் நாடும் இன்பம் இருவர் இன்பம் அதில் ஒருவர் இன்பத்துக்காக ஒருவர் துன்பப்பட வேண்டியதில்லை. ஒருவர் இன்பம் மற்றவர் துன்பம்; ஒருவர் வெற்றி, மற்றவர் தோல்வி; ஒருவர் ஆதாயம், மற்றவர் இழப்பு என்பதே ‘உலகியல்' நெறி என்று சிலர் கூறும் விலங்கியல் நெறியாகும். இவ் விலங்கியல் நெறியிலிருந்து நாகரிகம் நோக்கி முன்னேற்றுவிக்கும் முதற் பண்பும், முதற்படியும் காதலேயாகும்.