பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் – 45

தொ.ந. : ஏன் உழைப்பவன் உழைப்பை வாங்கி அதைச் சுரண்ட வழி தேடவேண்டும். உழையாதவர்களைச் சுரண்ட ஏதாவது வழி கிடையாதா?

(உழையாதவர்களிடம் பொருள் இருக்கும். வருவாய் ஏற்படாது. பொருளைத் திருடத்தான் முடியும், சுரண்ட முடியாது. இவ் எண்ணங்கள் முதலாளியின் முகத்தில் நிழலாடுகின்றன. அவர் தம் பக்கத்திலிருக்கும் முதலாளித்துவ பொருளியல் நூல் அறிஞரைப் பார்க்கிறார்.)

பொருளியல் நூல் அறிஞர் : முதலீடில்லாத வாணிகம் ஐயா, உங்கள் பேச்சு. தொழிலாளிகள் உழைத்துச் செய்த சரக்கை வைத்துத்தான் எங்கள் தொழில் நடக்க வேண்டும் என்றில்லை. செய்துமுடித்த சரக்குகளை வாங்கி விற்றால்கூட எங்களுக்கு ஆதாயம் கிடைத்துவிடும். நாமே உண்டு பண்ணும் நேரத்தில் இன்னும் பேரளவு சரக்கை வாங்கிப் பெருத்த ஆதாயம் பெற முடியாதோ?

(இங்கே தொழில் முதலாளி வணிக முதலாளியாகி விடுகிறார்.)

தொ.ந.: எல்லா முதலாளிகளும் தாங்கள் செய்வதையே பின்பற்றத் தொடங்கிவிடலாமே. அப்போது சரக்குகளை உண்டுபண்ணுவது யார்? (தம் முதலாளித்துவ அறிஞர் எக்கசக்கத்துக்குள் மாட்டிக்கொண்டு விட்டார் என்று முதலாளி அறிந்து திடுமெனப் பேச்சையும் பேச்சுப் போக்கையும் தொனியையும் மாற்றுகிறார்.)

மு : நீர் என்ன, ஐயா! முதலாளி, முதலாளி என்று ஏதோ பெரிதாய் நினைத்துக்கொண்டிருக்கிறீர். அந்தத் தொழிலாளிகள் கண்ட சுகத்தை இங்கே நாங்கள் காண்கிறோமென்றா நினைக்கிறீர்கள்? நம் தொழிற் சாலையின் மதிப்புக்காகத்தான் சிறிது ஆடம்பரமும் பகட்டான செலவும் செய்யவேண்டி யிருக்கிறது. அல்லாமல் நாங்கள் எங்களுக்கென்று ஒரு தம்பிடியும் செலவு செய்ய மனம் வருவதில்லை. இரவு பகலாக நாங்கள் உழைப்பது நீங்கள் அறியாததா?

(முதலாளி இங்கே சமய குருவின் போதனைமுறை வேதாந்தத்தில் இறங்கிவிடுகிறார்.)