பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

101

முக்கியமானதும் பொது வாழ்வில் பட்டாங்கமானதும் ஆகும். இவர்கள் தொடக்க நிலைக்கு மேற்பட்ட கல்வியறிவுடையவர்கள். ஆயினும் உழைப்பாளியை விடப் பொருள் முறையில் அவர்கள் தன்னிலை உடையவர்களாயில்லை. இதனாலேயே அவர்களிடம் தொழில்துறையாளரின் அறிவுடன் பொதுமக்களின் எதிர்ப்புக் குணமும் ஒருங்கே இணைந்து காணப்படுகிறது. அரசியல், பொருளியல் சமூகப் பிரச்சனைகளில் இவர்கள் எளிதில் ஈடுபட்டுக் கலக்கின்றனர். இவ்வகுப்பின் பிறப்பு வரலாறு மிகவும் சுவையுடையது. பிரிட்டிஷார் இந்நாட்டில் ஆட்சியாளராக வந்துசேர்ந்த போது, தமக்கு வேண்டும் குமாஸ்தாக்களை அவர்களால் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்ய முடியவில்லை; ஏனெனில் அது அத்தனை செலவு பிடிக்கும். ஆகவே இவ்விடத்திலுள்ளவர்களை இவ்வகைக்குப் பயிற்றுவிக்க முற்பட்டனராம்! அவர்கள் இதற்காகவே பள்ளிகளும் பல்கலைக் கழகங்களும் தோற்றுவித்தனர். இவையே இந்தியாவின் புதிய குமாஸ்தா வகுப்பின் பிறப்பிடங்களாயின. இப்போதுகூட பி.ஏ. தேர்வில் தேறுபவன் தகுதி ஒரு குமாஸ்தாவாகும் தகுதி மட்டுமே என்பதை யாவரும் அறிவர்.

இந்தியாவின் நாட்டுப்புறத் தொழில்களிலும் உழவுத் தொழிலிலும் சீர்கேடு பெருகப்பெருகப் பெருந்தொகையினர் குமாஸ்தாத் தொழிலில் வந்து குவிந்தனர். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியிலும் தொழில் சங்கங்களிலும் வேண்டப்படும் குமாஸ்தாக்களுக்கு ஒரு வரம்பில்லாமலிருக்க முடியாது. இதனால்போட்டி ஏற்பட்டு, சம்பளக் குறைவும் தொழிலில் லாமையும் பெருகின. சிலர் ஆசிரியர்களாகவும் பிறர் கடைக்காரர்களாகவும் மாறினராயினும் பெருந்தொகையினர் எதிலும் இடம் பெறமுடியாத வர்களாயினர். நாம் மேலே கூறியபடி வளர்ச்சித் தன்மையுடைய தொழிலோ வாணிகமோ இருந்தால் இவர்களனைவரும் அவற்றில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர். ஆனால் இது நடைபெற இடமில்லாது போயிற்று. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் நாட்டுத் தொழில்கள் வளர்ச்சியடையாமல் நிலையாகவே உள்ளன. இதன் பயனாக அறிவும் அறிவு வளர்ச்சிக்குரிய அறிவாற்றலும் உடைய இவ்வகுப்பு தன் நிலையை உயர்த்திக்கொள்ள அரசியலில் புக நேர்ந்தது. இவர்களுக்குச் சமதர்ம அமைப்பு ஒரு பெரும் புதையல்.