பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120 ||

அப்பாத்துரையம் - 46

நகருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்கிறது. ஊர்கள் சில சேர்ந்து ஒரு குழு சற்று உயர்நிலைக் கூட்டுறவு அமைப்பு, அதாவது கூற்ற(தாலுக்கா)க் கூட்டுறவுச் சங்கம் அமைத்துக் கொள்ளலாம். ஒருவரிடத்திலிருந்து மற்றவரிடத்தில் விற்று அதன்மூலம் ஆதாயம்பெற்று ஒட்டுயிர்போல வாழும் தரகருக்கு இடமில்லாதுபோகும். கூற்றக்குழு தான் பெற்ற சரக்கு முழுவதையும் கோட்ட (ஜில்லாக் கூட்டுறவு)க் குழுவிற்கும், அது அதுபோல் இன்னும் உயர்நிலையானவற்றுக்கும் விற்கும். இவ்வகையில் உழவனுக்கு நேர்மையான விலையுறுதி கிடைக்கும். இதுதவிர, இதைவிட முக்கியத்துவம் வாய்ந்த வசதி யாதெனில், சரக்குகளைப் பரப்புதல் செலவற்றதாகவும் சரிசமத்துவம் பொருந்தியதாகவும் இருக்கும்.

பொருள்களைப் பயன்படுத்துவோர் திறத்திலிருந்து பார்த்தாலும் இது நலநிறைந்ததே. அவர்கள் தமக்கு வேண்டிய உணவுத் தேவைகளை மலிவாகவும் நேரடியாக உழவர் கூட்டுறவுச் சங்கத்திலிருந்தும் பெறுவர். இதை எளிதாக்க அவர்களும் பயனீட்டாளர் (Consumers) கூட்டுறவுச் சங்கம் அமைத்துக் கொள்வர். இத்தகைய சங்கங்கள் ஏற்கெனவே பல ஐரோப்பிய நாடுகளிலிருக்கின்றன; அவை பெரும்பாலான மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளன.

சமதர்ம அரசியல் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கு வசதிகள் செய்து ஆதரவளிப்பதுடன் அவற்றில் மிகுதி அக்கறையும் காட்டும். ஆயினும் கூடியமட்டும் அது அவற்றின் வேலையில் தலையிடாமலே இருக்கும்.

சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் விளைவின் ஒரு பெரும்பகுதி ஆண்டுதோறும் பாழாக்கப்படுகிறது.எலிகளின் தொல்லையால் காய்கறிகள் சந்தை சாவடிகளிலும் புகைவண்டி நிலையங்களிலும் கிடங்குகளிலும் சீரழிவதைப் பார்த்திருப் பீர்கள். சேமிப்பு வசதிகள் இவ்வழிவைத் தடுக்கும். இங்ஙனம் எல்லாவகைகளிலும் சமதர்மத்தின் கீழ் பயிர்த்தொழில் ஆதரவுபெறும். அத்துடன் மக்களும் போதிய நல்ல உணவைப்பெறுவர். அதுவும் தமக்கும் உழவருக்கும் ஒருங்கே நலம் பயக்கத்தக்க விலையிலேயே பெறுவர்.