பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

121

வினா (74) : இதனால் உழவன் எவ்வகையில் நலம் பெறுவான்? பொருளியல் முறையில் அவன் நன்னிலை யிலிருப்பான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவன் வாழ்க்கையில் இன்பம் மிகுதியாக இருக்கக் கூடுமா?

விடை : இதுவும் ஒரு சிறந்த கேள்வியே. ஏனெனில் உழவர் பிரச்சினையில் ஒரு சமூகக்கூறும் உண்டு. இந்தியாவில் கிராமங்கள் மிக மிகப் பல; அவையனைத்தும் வேறுபாடின்றி ஒரேபடியாக எவ்வளவோ பிற்போக்கானவையாகவே இருக்கின்றன. ஒரு நல்ல வீட்டில் வாழ்வது எப்படியிருக்கும் என்பதை உழவன் மறந்துவிடும் அளவு அவ்வளவு நீண்டநாளாகக் குச்சுக்குடிசைகளில் வாழ்ந்து வருகிறான்.நல்ல வீட்டில் வாழ்வது என்பதே அவனுக்கு அரச போகங்களுள் ஒன்றாக ஆகிவிடுகிறது. இது நம் சீரழிவின் ஒரு பகுதி. மிகப் பொதுவான வாழ்க்கை வசதிகள் கூட அவனுக்கு எட்டாதவை. அவன் பெரும்பாலும் சவுக்காரம் (சோப்) பயன்படுத்துவதில்லை; உடல்நலச் சாதனங்கள் அவனுக்குக் கிடைப்ப தில்லை. அணிமணிகள், மணப் பொருள்கள் முதலிய சிறுதிற இன்பப் பொருள்கள் வாழ்க்கையில் சற்று மகிழ்ச்சியும் ஒரு சிறு கிளர்ச்சியும் உண்டுபண்ணத்தக்க நுண்பொருள்கள் - அவன் வாழ்க்கைக்கு அயலா கின்றன. கிராமங்களில் பெரும்பாலும் பள்ளிகளே இருப்பதில்லை. கல்வி நம் கிராமங்களுக்கு எட்டாக் கிளையின் கிட்டாக்கனி யாயுள்ளது. கிராமத்தானுக்குச் சமூகத் தொடர்பும் சமூக வாழ்வும் மிக மிகக் குறைவு. அவன் தனித்து, ஒதுங்கிய வாழ்வு வாழ்கிறான். இக்குறைபாடுகள் உழவனிடத்தில் மட்டுமன்று, பொதுவாகக்கிராமவாசிகள் அனைவரிடத்திலுமே உள்ளன. இந்தியாவின் உழவர் பிரச்சினையுடன் கிராமவாசிகள் பிரச்சினையையும் தீர்க்க முற்பட்டு அவற்றை ஆழ்ந்து ஆராய்ந்தாலன்றி, உழவர் பிரச்சினையை நாம் தெளிவு படுத்தியவர்களாக மாட்டோம். இந்தியாவின் கிராமப் பிரச்சினை ஒதுங்கிய வாழ்வு, பிற்போக்குத்தன்மை, ஆதிகாலப் பிற்போக்கு நிலைமைகள் ஆகியவை செறிந்ததாகும்.

இங்கே தெளிவான முதல் தேவை போக்குவரவு, செய்தி இணைப்பு வசதிகள் அதாவது பாதைகள் வகுப்பது முதலியன ஆகும். நல்ல பாதைகள் மட்டுமன்றித் தற்காலப் போக்குவரவு சாதனங்களான உந்து வண்டிகள், புகைவண்டிகள் ஆகியவையும்