பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

25

வேளாண்மை பற்றிய அடிப்படைப் பிரச்சினை யாதெனில் குடியான வனிடமிருந்து விளைச்சலை வாங்கிக்கொள்ளும் விலை அவன் வாழ்க்கைக்குப் போதியதாகவும் அதே சமயம் நேர்மையான விலைக்குப் பொதுமக்களுக்குக் கிடைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இந்த இடத்தில்தான் முதலாளித்துவத்தின் விதியாகிய “பொருள் தருவித்தல் - தேவை” (Demand and supply) செயலாற்றத் தொடங்குகிறது. ஆனால் செயலாற்ற வேண்டும் முறை முதலாளித்துவ விதிக்கு நேர்மாறாயிருக்க வேண்டும். அதாவது சில சமயங்களில் மக்கள் பொருள்களை மிகவும் மலிவான விலைக்குப் பெறுகிறார்கள். மற்ற சமயங்களில் வாங்க முடியாத அளவு அருந்தல் நிலை ஏற்படுகிறது. பின்னால் கூறப்பட்ட தருணத்தில் மக்கள் ஒன்று, உணவின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது; அல்லது அதன் தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது. கூர்ந்து கவனித்தால் பொதுமக்களுக்குள்ள இதே இன்னல் உழவனுக்கும்; உற்பத்திப் பொருள்களில், அதாவது நகரத்தில் உண்டாக்கப் படும் துணி, கட்டடச் சாதனங்கள், பேனா, மை, ஒலிபரப்பு முதலிய எண்ணற்ற பொருள்களின் உற்பத்தி யாளருக்கும் இருப்பது காணலாம்.இவற்றை இன்னொரு வகையில் கூறுவதானால், வேளாண்மைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது என்றால் கிராம (வேளாண்மை)ப் பொருளியல் நிலவரத்தையும் நகர (தொழில்துறை)ப் பொருளியல் நிலவரத்தையும் நேர்மையான சரிநிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே. முதலாளித்துவம் ஒவ்வொரு உற்பத்தியாளனையும் அவன் விரும்புவதை, விரும்பும் அளவில் உற்பத்தி செய்ய இணக்கமளிப்பதன் பயனாக, இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் அது என்றும் வெற்றியடைய முடியவில்லை. ஆனால் சமதர்மம் உற்பத்திச் சாதனங்களைச் சமூகத்தின் ஆதிக்கத்திலேயே விட்டு வைக்கிறது. உற்பத்தியையும் வினியோகத்தையும் அது திட்டமிடுகிறது. ஆகவே அது வேளாண்மையைக் கெடுத்துத் தொழிலோ, தொழிலைக் கெடுத்து வேளாண்மையோ வளரவிடாது.

வேளாண்மையின் பொருளியல் நிலவரத்தைச் சீர்திருத்தி யமைப்பதே சமதர்மம் மனித இனத்துக்கு அளிக்கும் பரிசுகளில் முதன்மையானதாகும். (வேளாண்மை வகுப்பு உலக முழுவதிலுமே தொழில் வகுப்பைவிட வறுமையிலுள்ளது என்பது கவனிக்கத் தக்கது).