பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

65

நாட்டிலேயே உருவான அதன் தேசியப்பகுதி பற்றியவையே. இங்கும் அது நடைபெற்ற கால உலக நிலைகளின் சூழ்நிலையில் வைத்தே அதன் பெரும்பகுதியும் உணரப்பட வேண்டும். பிற நாடுகளில் புரட்சி ஏற்படாத காரணத்தால் (இதற்கு ரஷ்யநாடு பொறுப்பாளி என்று கூறமுடியாது) ரஷ்யா மேன்மேலும் தம் நலங்களையும் தம் வலிவையுமே நம்பி நிற்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு காரியமும் 'தம் கையே தமக்கு உதவி' என்ற முறையில் தேசிய வரையறைக்குட்பட்டுச் செய்ய வேண்டியிருந்தது. இவற்றின் காரணமாகப் புரட்சியில் சில தேசியப் பண்புகள் விலக்க முடியாதவையாயிருந்தன. இதற்காகக் குறைகூறியாக வேண்டுமானால் ரஷ்யாவுக்கு வெளியேயுள்ள சமதர்ம இயக்கத்தைக் கூற முடியாது. மற்ற சமதர்மிகள் செய்ய முடியாததை அவர்கள் உதவியில்லாமலே செய்து முடித்ததற்காகவா ரஷ்யாவைக் குறைகூறுவது!

என்றபோதிலும் சோவியத் கூட்டுறவின் நண்பர்களும் பகைவர்களும் இருவருமே ஒரு பெருந்தவறுக்கு ஆளாயுள்ளனர். அதாவது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நுணுக்கத்திலும் ரஷ்யப் புரட்சியே முழுவதும் திருப்பித் திருப்பிப் படிக்கப்படும் என்று இருசாராரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது அறியாமை மட்டுமன்று முழு மடமையாகும். (வரலாறு திரும்பித் திரும்பி வரும் என்ற பொது உரைக்கு மாறாக) வரலாறு என்றும் படித்த பாடத்தைத் திருப்பிப் படிப்பதில்லை. ஒவ்வொரு மாறுபாடும் அவ்வவ் இட, காலச் சூழ்நிலைகளைச் சார்ந்தே இயல்கின்றது. ஒருபோதும் அவற்றுடன் தொடர்பற்று நிகழ்வதில்லை. உலகப் புரட்சி என்பது ரஷ்யப் புரட்சியின் ஒரு மாபெரும் உலகப் பதிப்பாகவே இருக்கும் என்று யாரேனும் எதிர்பார்த்தால் வரலாறு அந்நம்பிக்கையை முற்றிலும் பொய்யாக்குவது உறுதி.

ரஷ்யப் புரட்சிபற்றியும் அதன் சமூகத்துறை நோக்கங்கள் பற்றியும் ஏற்பட்டுள்ள தப்பெண்ணங்களைப் போக்க இது உதவும். இன்றைய நிலைக்கு ஒத்த கேள்வியாவது, ரஷ்யப் புரட்சி எந்த அளவுக்கு மற்ற நாடுகளில் சமதர்மத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதே.