பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

அப்பாத்துரையம் - 46

வினா (38) : தொழிற் சங்க இயக்கம் தோன்றிய தெவ்வாறு?

விடை : தொழிற் புரட்சியியக்கம் ஏற்பட்டபோது நகர்களிலேயே அமைந்திருந்த தொழிற்சாலைகளில் உழைப்பதற்குத் தொழிலாளர்கள் வேண்டியிருந்தது. சிறு கைத்தொழிலாளர் இயந்திரங்களால் தம் வாழ்க்கைப் பிழைப்புக்கு வழிகெட்டுவிடு மென்று கருதித் தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஒருப்படவில்லை. தொழில் முதலாளிகள் தொழில் துறைக்குப் பெரும்பாலும் குடியானவரையே நம்பவேண்டியிருந்தது. முதலில் நகர் வாழ்விலும் இயந்திரத்திலும் பழகாத குடியானவரும் முணுமுணுக்கவே செய்தனர். ஆகவே அவர்கள் பலாத்காரமாகவோ வேறுசூழ்ச்சி முறைகளாலோ கொண்டுவரப்பட்டனர். இவ் வகையில் ஆசையூட்டுவதற்காகக் கிராமங்களில் அவர்கள் பழக்கப் பட்ட வாழ்க்கை ஊதியத்தை விட ஒரு சற்று மிகுதியான வாழ்க்கைத்தரந்தந்து அவர்கள் கொண்டுவரப்பட்டனர்.இதனால் வரவர மிகுதியான குடியானவர்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக்குடியேறத் தொடங்கினர்.

தொழிலாளர் தொகை பெருகப் பெருக, மிகுந்த ஊதியந்தந்து வரவழைக்கவேண்டிய அவசியம் குறைவதை முதலாளிகள் உணர்ந்தனர். அத்துடன் தொடக்கத் தொழில் வளத்தைத் தொடர்ந்து தொழில் மந்தமும் ஏற்பட்டது. மூலப்பொருள்களைப் பெறுவதில் சிறு சிறு நெருக்கடி நிலைகள் எழுந்தன. உற்பத்திப் பொருள்கள் விற்பனையான விற்பனைக் களங்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாயின. போட்டி தலையெடுத்தது. ஆகவே சிக்கன முறைகளுள் ஒன்றாக முதலாளிகள் கூலியைக் குறைக்கத் தலைப்பட்டனர். இதற்கெதிராகத் தொழிலாளிகள் தங்களைக் காத்துக்கொள்வது எவ்வாறு? இன்னும் அவர்களுக்கு ஒரு சாதகமான வலு இருந்தது. அவர்கள் பெருந் தொகையினராகவே வேலை செய்தும் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் வசித்தும் வந்ததால், அவர்கள் அமைப்பு முறையில் ஒருங்குகூடித் தம் நிலைமையைச் சரிவரப் பாதுகாத்துக்கொள்ள வகையிருந்தது. முதலில் இத்தகைய அமைப்பு ஏற்படுத்தும் முயற்சிகள் முதலாளிகளால் எதிர்க்கப் பட்டன. ஆனால் இவ்வெதிர்ப்பு நெடுநாள் நடைபெறவில்லை. தொழில் வளர வளர, தொழிலாளர் தொகையும் பெருகிற்று.