5. தகுதிக்கு ஏற்ற பதவிகள்
மற்போர் வீரன்
ஒரு நாள் அரசர் அவையில் மல்லன் ஒருவன் வந்தான். அவன் வடநாட்டு மல்லன். அவன் வட இந்தியாவில் இருந்த அரசர் சபைகட்கு எல்லாம் சென்றவன்; அங்கங்குப் புகழ்பெற்று இருந்த மல்லரைப் புறம் கண்டவன். அவன் விந்த மலைக்குத் தென்பாலும் தன் வெற்றிக் கொடியை நாட்ட எண்ணினான்; அதனால் தக்ஷிணத்திற் புகுந்தான். ஒரிஸ்ஸா, பீஜப்பூர் முதலிய நாடுகளிலும் வெற்றி பெற்றான். அவன் இறுதியில் விஜயநகரப் பேரரசிலும் பெயர் பெற்று மீளலாம் என்ற எண்ணத்துடன் வந்தான். அவன் பேரரசரை வணங்கித் தன் வரலாற்றைக் கூறினான். இராயர் அவனது வெற்றிப் பிரதாபத்தைக் கேட்டார். அவையில் இருந்த அனைவரும் கேட்டனர்.
‘அடியேன் இருக்கிறேன்'
பேரரசர் தம் அவையில் இருந்த பெரிய தளபதிகளைப் பார்த்தனர்; மற்போர் வீரர்களைக் கவனித்தனர்; நாகமர் போன்ற பிரபுக்களைப் பார்த்தனர். ஒருவரும் புதிய மல்லனுடன் மற்போர் புரிய முன்வரவில்லை. இராயர் மனம் வருந்தினார்; "ஓர் அந்நியன் நமது சபையில் விருது கூறுகின்றான். இவனை எதிர்க்கத் தக்கவர் நம்மிடம் இல்லை எனின், நமது பேரரசு என்ன வலிமையை உடையது!' என்று எண்ணிக் கலங்கினார்; இறுதியில், 'இவனுக்கு ஏற்ற ஜோடி விஜயநகரத்தில் இல்லையோ?' என்று கேட்க வாய் திறந்தார். அப்பொழுது, ‘அடியேன் இருக்கிறேன்; ஆணை தர வேண்டும்' என்று ஒருவர் கூறி அரசரை வணங்கினார். அவர் யார்? அவரே நமது அரியநாயகர்.
இராயர் முதலில் திகைத்தார்; அரியநாயகரது போர் வன்மையை இராயர் கண்டதில்லை. ஆயினும் விசுவநாதர்