பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ||

அப்பாத்துரையம் - 5

செய்யத்தக்க பண்பு பெற்றன.குடிமக்கள் முதலியாரைக்கண்கண்ட தெய்வமாகப் போற்றலாயினர்.

திருநெல்வேலியில் குழப்பம்

முதலியார் வட பாண்டி நாட்டில் இத்தகைய அரும் பணிகள் செய்து வந்ததால், மதுரையில் நாயக்கர் அரசு வேரூன்றலாயிற்று. வட பாண்டி நாட்டார் ‘நாயக்கர் அரசே வேண்டும்' என்று சொல்லி, முதலியார் அரும்பணிகளைப் பாராட்டி வந்தனர். இவற்றைக் கண்டு கயத்தாறு என்னும் ஊரில் இருந்த பஞ்சபாண்டியர் அச்சங் கொண்டு கிளர்ச்சி செய்தனர், "பாண்டி நாட்டில் பாண்டியர் ஆட்சி வேண்டும்; தெலுங்கர் ஆட்சி வேண்டா.நாடு எங்கட்குச் சொந்தம். அந்நியர் இங்குப் புக இடம் இல்லை” என்று பிரசாரம் செய்தனர்; திருநெல்வேலி ஜில்லாவில் இருந்த கள்ளர் - மறவர் - முதலிய வீர மக்களைத் தட்டிக் கிளப்பினர். அதனால் தமிழ் வீரர்கள் கொதித்து எழுந்தனர்; தென் பாண்டி நாட்டில் பெரும்படை திரண்டது. பஞ்ச பாண்டியர் அப்படையை நடத்திக் கொண்டு, நாயக்க அரசை ஒழிக்கும் நோக்கத்துடன் போருக்குப் புறப்பட்டனர்.

போர் நிகழ்ச்சிகள்

பஞ்சபாண்டியர் நாட்டுப்பற்றை அரியநாதர் பாராட்டினார்;எனினும் அரச சேவையை நிறைவேற்ற வேண்டும் பொறுப்பினால் அவர்களுடன் போர் புரியத் துணிந்தார்; வடபாண்டிய நாட்டுப் படையுடன் சென்று போரிற் குதித்தார். இருதிறத்துப் படைகளும் கடுமையாகப் போர் புரிந்தன.எனினும் பாண்டியர் படை நாட்டுப்பற்று மிகுந்த நிலையில் உயிரைத் துரும்பாக மதித்துப் போரிட்டது. முதலியாரும் போரைக் கடுமையாகவே நடத்தினார். வாரங்கள் மறைந்தன; மாதங்கள் தோன்றின; ஆறு திங்கள் அரும்போர் நிகழ்ந்தது. எவருக்கும் வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை; அரியநாதரும் விசுவநாதரும் அச்சமும் கவலையும் கொண்டனர். நாட்டுப் பற்று மிகுந்த வீரரை எதிர்த்து வெல்லுதல் இயலாதென்பதை அவ்விருவரும் உணர்ந்தனர்.