132
அப்பாத்துரையம் – 5
முதலியார் தமது இளம்பருவத்தில் (நாற்பது ஆண்டுகட்கு முன்) தமக்கு வாழ்வு வரும் என்று சாஸ்திரி ஒருவர் சொன்னதையும் தாம் அவருக்கு எழுதிக் கொடுத்த ஓலை பற்றிய விவரத்தையும் அவையோர் அனைவரும் கேட்க விளக்கமாக விளம்பினார்; பின்னர் மறையவரைக் காட்டி, “இவர் அப்பெரிய சோதிடர் புத்திரர்” என்று கூறினார்.
சொல் தவறாத செம்மல்
பிறகு முதலியார் மறையவரைப் பார்த்து "ஐயரே, இது நான் எழுதிக் கொடுத்த ஓலைதான்; சிறிதும் ஐயம் இல்லை. அதனிற் கண்டபடி நான் எனது சம்பத்தில் காற்பகுதியை இப்பொழுதே உங்கட்குத் தருகிறேன், பெற்றுக் கொள்க” என்றனர். உடனே சபையோர், "அட்டா! என்ன! என்ன! சம்பத்தில் காற்பகுதியா! சொன்ன சொல் தவறாத செம்மல் இவர் அல்லவா? என்ன பெருந்தன்மை!” என்று வியப்புடன் பாராட்டிக் கூறினர்.
முதலியார் பேச்சைக் கேட்டு மறையவரும் திகைத்தார். அவர் கண்களில் ஆனந்த நீர் வெளிப்பட்டது. அவர் முகம் மலர்ந்தது. அம்மறையவர் பேரன்புடன் முதலியாரைப் பார்த்து, "முதலியார் அவர்களே, தங்கள் சத்தியமே சத்தியம்! தாங்களே சொல் தவறாத உத்தமர். நீங்கள் மேலும் பல போக பாக்கியங்களைப் பெற்று நீடு வாழவேண்டும். தங்கள் புகழ் எங்கும் பரவவேண்டும். தமிழ்நாடு உள்ள அளவும் தங்கள் பெயர் இந்நாட்டில் நிலவ வேண்டும். நான் வேதம் ஓதும் பிராமணன் எனக்குத் தங்கள் சம்பத்தில் கால் பாகம் எதற்கு? பிறவிப் பெரும்பயன் அடைவதே என் நோக்கம். மக்கள் சமரச சன்மார்க்க நெறியில் வாழப் பார்ப்பதே எனது விருப்பம்” என்று மகிழ்ச்சி
பொங்கப் பேசினார்.
வேதியர் விருப்பம்
அரியநாதர் அகம் குழைய அந்தணரை நோக்கி, "ஐயரே நீங்கள் உங்கள் பரந்த கல்விக்கும், நிறைந்த ஒழுக்கத்திற்கும் ஏற்பப் பேசியது சரியே, ஆயினும், தங்கட்கு ஏதேனும் கொடுத்தால்தான் என் மனம் அமைதியுறும். ஆதலின், 'வேண்டா' எனக் கூறாது. தாங்கள் ஏற்றருளல் வேண்டும்; தங்கள் விருப்பத்தை உரைத்தருள்க” என்று வேண்டினார்.