தளவாய் அரியநாத முதலியார்
139
நிஜாம் ஷா, செப்புக் காசுகளை பீரங்கிகளிற் போட்டுச் சுட ஏற்பாடு செய்தார். இந்த யோசனையினால், உருக்கிய செம்பு வந்து மழைபோலப் பொழிந்தது. பாவம்! விஜயநகரப் படைகள் நாற்புறமும் சிதறி ஓடின. கெட்ட காலத்துக்கு ஏற்ற புத்தி இராமராயரைப் பிடித்துக் கொண்டது. அவர் அரியநாதர் முதலியோர் யோசனையையும் கேளாமல் பல்லக்கிலேயே இருந்தார். அவரை யானைமேற் காணாத படைவீரர் அவர் கொல்லப்பட்டார் என்று எண்ணி அச்சம் கொண்டனர். இந்த இரண்டு காரணங்களாலும் அவர்கள் சிதறிவிட்டார்கள்.
இவ்வாறு சிதறிய வீரர்களை அழிக்கும்படி நிஜாம் ஷா ஐயாயிரம் பரி வீரரை ஏவினர். அவர்கள் பாய்ந்து சென்று படுகொலை புரிந்தனர். இவற்றைக் கண்ணூற்ற இராம ராயர் அச்சம் கொண்டார். அப்பொழுதும் அவர் யானை மீது ஏறவில்லை; ஏனைய நான்கு சுல்தான்களையும் தம் தம்பிமார் தோற்கடித்ததையும் அவர் அறியார். அவர் மனம் குழப்பமுற்றது.
இராம ராயர் தலை
தூரத்தில் இருந்தவாறே இராமராயரையே கவனித்திருந்த நிஜாம் ஷா, தம் படைவீரருடன் அவரை நோக்கிச் சென்றார். நிஜாம் ஷாவின் போர் யானையும் படை வீரரும் பல்லக்கை நெருங்கவே, பல்லக்கைச் சுமந்திருந்தவர் அதனை விட்டு ஓடிவிட்டனர். உடனே இராமராயர் பல்லக்கை விட்டு இறங்கினார். அப்பொழுது பக்கத்தில் இருந்த வீரன், தான் ஏறி இருந்த குதிரையை அவருக்கு உதவினான். இராம ராயர் அக்குதிரைமீது ஏறினார். இதற்குள் நிஜாம் ஷா இராயரை நெருங்கித் தம் வாளை வீசினார். அந்தோ! இராமராயர் தலை நிலத்தில் வீழ்ந்தது.
படுதோல்வி
உடனே பகைவர் இராமராயர் தலையை ஒரு வேல் நுனியில் தூக்கி உயர்த்தி வெற்றி முழக்கம் செய்தனர். இராயர் தலையைக் கண்ட முஸ்லிம் வீரர்கள் மனக்களிப்புக் கொண்டனர்; விஜயநகர வீரர் மனக்கலக்கம் கொண்டு சிதறினர். போர்க்களத்தில் ஒரே குழப்பம் உண்டாகிவிட்டது.