பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிண தேவராயர்

173

தொலைவில் நீர் கொண்டுவரப்பட்டு நகரத்திற்கு உதவுமாறு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கடைத் தெருக்கள்

மேற்சொன்ன நான்கு கடைத்தெருக்களும் கண்டு களிக்கத் தக்கவையாக இருந்தன. மிக்க விலை மதிப்புள்ள நவரத்தினக் கடைகள், பொன்நகைக் கடைகள், பொன்னும் மணியும் விரவிச் செய்யப்பட்ட நகைகளை விற்கும் கடைகள், வெள்ளிப் பாத்திரக் கடைகள் என்பன சிறப்பிடம் பெற்றிருந்தன. அவற்றை அடுத்துச் செம்பு, ஈயம், வெண்கலம், தகரம், இரும்பு முதலிய உலோகப் பொருள்களைக் கொண்ட கடைகள் அமைந்திருந்தன. பருத்தியாடைக்கடைகள், சீனப் பட்டாடைக் கடைகள் ஒருபுறம் சிறப்புறத் திகழ்ந்தன. ஒருபால் தந்தம், மரம், வெள்ளி, வெண்கலம் இவற்றால் செய்யப்பட்ட பலவகைப் பொருள்களைக் கொண்ட கடைகள் இடம் பெற்றிருந்தன, ஒருபக்கம் அகில், சந்தனம், குங்கிலியம் முதலிய மணப் பொருட்கடைகள் மலிந்திருந்தன.

குழல், யாழ், வீணை, மத்தளம் முதலிய இசைக் கருவிகளை விற்கும் கடைகள் வீறுகொண்டிருந்தன. நெல், சோளம், வரகு, தினை, சாமை, முதலிய கூலப் பொருட் கடைகள் பல இருந்தன. எள்நெய், தேங்காய்நெய், முத்துக்கொட்டை நெய் முதலிய நெய் வகைக் கடைகள் பல; புத்தகங்கள், எழுதுவதற்குரிய பனை யோலை ஏடுகள், பதப்படுத்தப்பட்ட எழுத்தாணிகள் என்பன வைக்கப் பட்டிருந்த கடைகள் பல; மல்லிகை, முல்லை, இருவாக்ஷி, ரோஜா முதலிய மலர்களைக் கொண்டு செய்யப்பட்ட பலவகை மனப்பொருட்கடைகள் பல பொலிந்திருந்தன. விஜயநகரத்தில் இருந்த அரசர்முதல் ஆண்டியீறாக அனைவரும் தினந்தோறும் ரோஜா மலர்களை மிகுதியாகப் பயன்படுத்தி வந்தனர். அதனால் விஜய நகரத்தில் ரோஜா மலர் விற்பனை மிகுதியாக நடைபெற்று வந்தது. வெற்றிலை பாக்குக் கடைகளும் மிகப் பலவாக இருந்தன. நகர மக்கள் வெற்றிலை பாக்கை மிகுதியாகப் பயன்படுத்தினமையே இதற்குக் காரணம்.

நகர மாந்தர் தெருக்கள்

அரண்மனையைச் சுற்றிலும் அமைச்சர், பிரபுக்கள், மண்டலத் தலைவர், படைத்தலைவர், அரசாங்க அலுவலாளர்,