174)
அப்பாத்துரையம் - 5
அவைப் புலவர்கள் முதலிய பெருமக்கள் வாழ்ந்த தெருக்கள் அமைந்திருந்தன. ஒவ்வொரு தெருவும் அகன்று காற்றோட்டம் பொருந்தியதாக இருந்தது. அத் தெருக்களில் மாடமாளிகைகளே காணப்பட்டன. அத்தெருக்களை அடுத்து வாணிகப் பெரு மக்களின் தெருக்கள் விளங்கின. விஜயநகரப் பெருநாட்டில் உள்நாட்டு வாணிகமும் அயல்நாட்டு வாணிகமும் சிறந்த முறையில் நடைபெற்று வந்ததால் வாணிகப் பெருமக்கள் வளமுற்று வாழ்ந்தனர். அவர்கள் தெருக்கள் பொன் கொழிக்கும் தெருக்களாகக் காணப்பட்டன. அவற்றுக்கு அப்பால் பொற்கொல்லர், இரும்புக் கொல்லர், கன்னார், தச்சர், தந்தவேலை செய்பவர், முத்துக் கோப்பவர், பவள வேலைக்காரர் கல் இழைப்பவர், கல்லுருச் செய்பவர், செம்பு, வெண்கலம், வெள்ளி, பொன் இவற்றைக் கொண்டு பல உருவங்களை அமைப்பவர் முதலியோர் வாழ்ந்த தெருக்கள் வளமாகக் காணப் பட்டன. நகரத்தின் சிறப்பிடத்தில் நடன மகளிர், நாடக மகளிர், இசைவாணர், ஆடல் ஆசிரியர், இசை ஆசிரியர், குழல்-யாழ்- வீணை-முழவு முதலியவற்றை இசைப்பவர், ஓவியக் கலைஞர் முதலியோர் வாழ்ந்த தெருக்கள் அழகுற்று விளங்கின. இசை, நடனம், நாடகம் இவற்றில் வல்லவராக இருந்த பொதுமகளிர் தெருக்கள் மாடமாளிகைகள் பெற்றுப் பெருவனப்புற்று விளங்கின என்று யாத்ரிகர் ஒருவர் குறித்துள்ளனர். அவர் கணக்குப்படி நகரத்தில் ஏறத்தாழ இலக்ஷம் வீடுகள் இருந்தன என்னலாம்; மக்கள்தொகை ஐந்து இலக்ஷம் என்று சொல்லலாம்.
அரண்மனை
நகரத்தின் நடுநாயகமாக விளங்கியது அரசர் அரண்மனை யாகும். அஃது அமைந்துள்ள இடத்தில் துங்கபத்திரையாற்றுக் கால்வாய்களிலிருந்து பிரிக்கப்பட்ட நீரோட்டங்கள் பளிங்குக் கற்கள்மீது பாய்ந்த வண்ணம் இருந்தன. அரண்மனை வானளாவிய கட்டிடங்களைப் பெற்றிருந்தது. அதன் வாயிலில் (கிருஷ்ணதேவராயர் காலத்தில்) கிருஷ்ணதேவராயர் உருவச் சிலையும் அவர் தந்தையாரான நரச நாயக்கரது உருவச் சிலையும் மிகவுயர்ந்த கற்களில் செய்து நிறுத்தப்பட்டிருந்தன. அரண்மனைக்குள் அரசர் மாளிகை, அரசமகளிர் மாளிகை, அரசர் தொழில் நிலையம், நடன மண்டபம், நாடக அரங்கு, இசை