இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கிருட்டிண தேவராயர்
195
தம் திறமையைப் புலப்படுத்தியவரைக் கனப்படுத்தினார். அவர் ஒவ்வொரு போரிலும் முன்னணியில் நின்று வீரரை ஊக்கப் படுத்தினார். அவரது வீர முகத்தைப் பார்த்தும் வீரவுரைகளைக் கேட்டும் விஜயநகரப் படைவீரர் ஊக்கம் கொண்டு போரிட்டனர். அவரது அன்புக்கு வீரர்கள் அடிமையாயினர்; தம் உயிரைத் துரும்பென மதித்தனர்; சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றனர்.
அப்பாஜி இராயருக்கேற்ற அமைச்சர். அவர் சந்திர குப்தனுக்கு அமைந்த சாணக்கியரைப் போலச் சிறந்த அரசியல் அறிஞர்; நுட்ப அறிவினர்; இராயரைத் தம் உயிரெனக் கருதியவர். இராயரும் அவரைத் தம் தந்தையாராகவும் குருவாகவும் கருதிப் பாராட்டிவந்தார்; அவர் சொற்படியே நடந்து வந்தார். அரசரும் அமைச்சரும் ஒத்த மனத்தினராய் இருந்து வந்தமையே இராயரது வெற்றிக்குச் சிறந்த காரணம் என்னலாம்.