பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

அப்பாத்துரையம் - 5

சவாரி செய்வது வழக்கம்; சில நாட்களில் குதிரைச் சவாரிக்குப் பதிலாகக் கனமுள்ள உடற்பயிற்சிப் பொருள்களைக் கைகளில் தூக்கிக் கொண்டு பயிற்சி புரிவார்; அதன் பின்னர்த் தம் அரசாங்க மல்லர் ஒருவருடன் மற்போர் செய்வார். இப்பயிற்சிகள் அனைத்தும் பொழுது விடிவதற்குள் நடைபெறும். பின்னர் இராயர் அரண்மனைக் குளத்திற் குதித்து நன்றாக நீந்திக் களிப்பார். இத்தகைய அரசரை வரலாற்றில் காண்பது அருமை அல்லவா?

அடங்காச் சீற்றம்

இராயர் சில சமயங்களில் திடீரெனச் சினம் கொள்வார். அப்பொழுது அவருடைய கண்கள் செந்நிறம் அடையும்; மீசை துடிக்கும்; புருவங்கள் நெற்றி முற்றச் செல்லும். அவர் பற்களை நறநறவென்று கடிப்பார். தமது அரசியல் உத்தியோகஸ்தர்கள் தவறு செய்தனர் என்பதைக் கேட்கும் பொழுதும் தமது ஆணை நிறை வேற்றப்படவில்லை என்பதை அறியும் பொழுதும் அவர் இங்ஙனம் அடங்காச் சீற்றம் கொள்ளுதல் இயல்பு. ஒருமுறை அப்பாஜியின் அரசியலில் சில குறைகள் நேர்ந்து விட்டன என்பதை அறிந்ததும் இராயர் அடங்காச் சினம் கொண்டார். அப்பாஜியோ தம்மை வளர்த்த பெரியவர்; தம் நன்மையில் நாட்டம் உடையவர். ஆதலின் அவரைத் தண்டிக்க மனம் இல்லாமல், இராயர் சீற்றம் தணியாதவராய் நகருக்கு வடக்கே இருந்த கோவில் ஒன்றில் சென்று தங்கிவிட்டார். அப்பாஜி இராயரிடம் சென்று பக்குவமாக அவர் சீற்றத்தைப் போக்கி அரண்மனைக்கு அழைத்து வந்தார்.

தோற்றாரிடம் பெருந்தன்மை

பகைவரிடத்தும் போரில் தோற்றவரிடத்தும் பெருந்தன்மை காட்டுதல் இராயரிடம் காணப்பட்ட தனிப்பண்பாகும். பிரதாபருத்திர கஜபதி என்பவன் கலிங்க நாட்டு அரசருள் ஒருவன். இராயர் அவன்மீது படையெடுத்துச் சென்று அவனைப் போரில் முறியடித்தார்; போரில் தோற்ற அவனைக் கௌரவமாக நடத்தினார். இராயர் உம்மத்தூர் முதலிய மேற்குப் பகுதி ஊர்களைக் கைப்பற்றியவுடன் அப்பகுதியில் இருந்த சிற்றரசரை மலர் முகத்துடன் வரவேற்று அன்பு கனியப் பேசினார்;