7. புவி அரசரும் கவி அரசரும்
தென்னிந்திய இலக்கிய வரலாற்றில் கிருஷ்ண தேவராயர் ஆட்சி மிக்க சிறப்புடைய பகுதியாகும். அவரது பேரவையில் வடமொழி-தெலுங்கு-கன்னடம்-தமிழ்மொழிகள் சார்பாகப் புலவர் பெருமக்கள் பலர் இருந்தனர். அவர்கள் தத்தம் மொழியில் பல நூல்களைச் செய்து பெயர் பெற்றனர். கிருஷ்ணதேவராயர் புலவர்களைப் போற்றிய புரவலர்மட்டும் அல்லர். அவரே பெரும் புலவராகவும் இருந்தார்; பிறர் புலமையை அளந்தறியும் ஆற்றல் பெற்றவராயும் இருந்தார்; எச்சமயத்தைச் சேர்ந்த புலவராக இருந்த போதிலும் அவர்கள் புலமை ஒன்றுக்கே மதிப்பீந்து ஆதரித்தார்; புலவர்களைத் தேவைக்கு மேற்பட்ட நிலையில் உயர்த்திப் பல நூல்களை வரையுமாறு செய்தார். இராயரது ஆட்சியில் தெலுங்கு இலக்கியம் ஒப்பற்ற உயரிய நிலையை உற்றது. முதலில் புவியரசராகிய கிருஷ்ண தேவராயர் வரைந்த நூல்களைக் காண்போம்.
வடமொழி நூல்கள்
இராயர் வடமொழி நூல்களை வரைந்தனர் என்பது தெரிகிறது. அவை-(1) மதாலஸ சரித்திரம், (2) சத்யாவ பிரேணனம் (சத்தியபாமா- திருமணம்), (3) சகல கதா சார சங்கிரகம், (4) ஞான சிந்தாமணி, (5) இரச மஞ்சரி என்பன. இவை இப்பொழுது கிடைக்குமாறில்லை. ஜாம்பவதி கல்யாணம் என்பது ஒரு நாடக நூல். இது இராயரால் செய்யப்பட்டது என்பர். ஜாம்பவதி என்பவள் ஜாம்பவான் மகள்; கிருஷ்ணனுடைய மனைவியர் எண்மருள் ஒருத்தி. அவளைக் கண்ணன் மணந்த வரலாற்றை நாடக வடிவில் உணர்த்தும் இந்நூல் ஐந்து காட்சிகளைக் கொண்டது. இஃது ஆண்டுதோறும் விரூபாக்ஷர் கோவிலில் வசந்த விழாவில் நடித்துக் காட்டப்பட்டது.