6
அப்பாத்துரையம் - 5
ஆண்டவர் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட மலையமான்கள் ஆவர்.
சோழ நாடு
சோழ நாடு என்பது சிதம்பரத்திற்கு வடக்கே உள்ள வள்ளாறு முதல் பாண்டிய நாட்டிற்கு வடக்கேயுள்ள வெள்ளாறு வரை உள்ள நிலப்பரப்பாகும். இந்நாடு ஏறத்தாழச் சமவெளியாக அமைந்திருப்பதாகும். இரண்டொருகுன்றுகளைத் தவிர இந்நாட்டில் மலைகள் இல்லை; காடுகள் இல்லை. இதன்கண் “பொய்யாதளிக்கும் பொன்னி" என்று புலவரால் ஏத்தெடுக்கப் பெற்ற காவிரியாறு தன் துணையாறுகளுடனும் கிளையாறுகளுடனும் வற்றாது பாய்ந்து வருகின்றது. இந்தப் பல ஆறுகளால் சோழ நாடு மிக்க வளம் பெற்று, 'சோழ வளநாடு சோறுடைத்து' என்று புகழ் பெறுவதாயிற்று.
நகரங்கள்
சோணாட்டின் தலைநகரங்களுள் பழமையானது உறையூர். இது திருச்சிராப்பள்ளி நகரத்தைச் சேர்ந்த சிறுபகுதியாக இன்று இருக்கின்றது.இத்துடன் காவிரிப்பூம்பட்டினம் என்பதும் தலைநகரமாக இருந்தது. பின்னது சோணாட்டின் சிறந்த துறைமுக நகரமாகவும் விளங்கியதாகும். கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இத் துறைமுக நகரம் மிக்க சிறப்புற்று விளங்கியது என்பதைச் சிலப்பதிகாரம்,பட்டினப்பாலை என்னும் பழைய நூல்களால் அறியலாம். இதற்கு அடுத்துத் துறைமுகப் பட்டினமாக இருந்தது நாகப்பட்டினம் ஆகும்.
சோழ மன்னர்
இந்த வளநாட்டைத் தொன்று தொட்டு ஆண்டு வந்தவர் சோழர் எனப்பட்டனர். அவர்கள் வளமிக்க நாட்டை ஆண்டதால் ‘வளவர்' எனப் பெயர் பெற்றனர்; நிலத்தைக் கிள்ளி (உழுது) பயிரிட்டமையால், 'கிள்ளி' எனப்பட்டனர் போலும்! இவர்களுட் பலருடைய பெயர் பழைய தமிழ் நூல்களிற் காண்கின்றன. அவருள் பலர் கவிபாடும் ஆற்றல் பெற்ற பெரும்புலவராக இருந்தனர்; வீரம் செறிந்த வேந்தர் பலராவர்.